திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவர் மீது வழக்கு


திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 July 2021 8:32 AM IST (Updated: 6 July 2021 8:32 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவர் மீது வழக்கு கோர்ட்டு உத்தரவின்பேரில் மகளிர் போலீசார் நடவடிக்கை.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரத்தைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் ஒருவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பிரதான சாலையை சேர்ந்த ரகு (வயது 52) என்பவர் அறிமுகமானார். அவர், தான் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பு நிறுவன மேலாளராக உள்ளதாகவும், தன் மனைவி புற்றுநோய் பாதிப்பால் இறந்துவிட்டதால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தைகள் கூறியதாக தெரிகிறது.

இதனால் அந்த பெண் அவருடன் நெருங்கி பழகியதால் 4 முறை கர்ப்பம் ஆனதாகவும், ஆனால் ரகு கட்டாயப்படுத்தி கருவை கலைக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதுடன், வருவாய் ஆய்வாளராக உள்ள தனது மைத்துனர் பிரபாகரன் என்பவருடன் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கி 2 பவுன் நகை மற்றும் அவரது இருசக்கர வாகனத்தை பறித்துவிட்டு விரட்டி அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி பரங்கிமலை துணை கமிஷனர் அலுவலகம், தாம்பரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தாம்பரம் கோர்ட்டில் அந்த பெண் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு, ரகு மற்றும் பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில் தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் ரகு மற்றும் பிரபாகரன் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல், சங்கிலி பறிப்பு உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story