நண்பர்களுக்கு மது விருந்து வைத்தபோது மோதல்: ரவுடிக்கு கத்தியால் சரமாரி வெட்டு; 2 பேர் கைது


நண்பர்களுக்கு மது விருந்து வைத்தபோது மோதல்: ரவுடிக்கு கத்தியால் சரமாரி வெட்டு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 July 2021 11:18 AM IST (Updated: 6 July 2021 11:18 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே குடிபோதையில் யார் பெரியவர் என்பதில் ஏற்பட்ட வாய்த்தகராறில் ரவுடி ஒருவரை சரமாரியாக வெட்டிய அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி அருகே உள்ள பாலீஸ்வரன் கண்டிகை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கர் (வயது 35). இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழங்குகள் கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இவர் குண்டர் சட்டத்தில் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தின் வழிப்பறி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட ரிஸ்க் பாஸ்கர், அங்கிருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த வாரம் தான் திருச்சி மத்திய சிறையில் இருந்து பாஸ்கர் வெளியே வந்தார்.

கத்தி வெட்டு

இதையடுத்து, புதுகும்மிடிப்பூண்டியில் தனது வீட்டையொட்டிய பாலீஸ்வரன் கோவில் எதிரே உள்ள காலி மைதானத்தில் தனது நண்பர்களான ஜெகன் (28), கார்த்திக் (28) மற்றும் பிரேம்குமார் (32) ஆகியோர்களுக்கு பாஸ்கர் மது விருந்து வைத்து உள்ளார்.

அப்போது. போதை உச்சம் அடைந்த நிலையில், யார் பெரிய ரவுடி என்பதில் ரிஸ்க் பாஸ்கருக்கும் மற்றொரு ரவுடியான ஜெகனுக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், ஜெகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரிஸ்க் பாஸ்கரை வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் கழுத்து அறுபட்டும் தலையில் பலத்த காயமடைந்த ரவுடி ரிஸ்க் பாஸ்கர், கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி ரிஸ்க் பாஸ்கரின் நண்பர்களான ஜெகன் மற்றும் கார்த்திக் ஆகிய 2 பேரையும் முதல் கட்டமாக கைது செய்தனர்.

Next Story