தொழிற்சங்கத்தினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்


தொழிற்சங்கத்தினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 July 2021 6:54 PM GMT (Updated: 6 July 2021 6:54 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

விலை உயர்வு

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து இருப்பதுடன், விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் உள்ளிட்ட மோட்டார் தொழிலாளர்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. சங்க பொதுச்செயலாளர் ஜோதி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சாலை போக்குவரத்து சங்க மாவட்ட பொருளாளர் தன்ராஜ், ஆட்டோ தொழிற்சங்க துணைத்தலைவர் நடராஜன், அரசு போக்குவரத்து சங்க இணை செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசு போக்குவரத்து மற்றும் ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் காமராஜ், பொருளாளர் தேவி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அப்போது அவர்கள், சாலை பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். காப்பீடு, சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். கொரோனா நிவாரண நிதி மாதம் ரூ.7,500 மற்றும் உணவு பொருட்கள் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சிலிண்டருக்கு ஒப்பாரி

ஆர்ப்பாட்டத்தின் போது சமையல் கியாஸ் சிலிண்டருக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலை அணிவித்து ஒப்பாரி வைத்தனர். மேலும் தேங்காய் உடைத்து, பழம், கற்பூரம் காட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டடத்தில் ஈடுபட்டு கோஷங்களும் எழுப்பினர்.

Next Story