கர்ப்பிணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்


கர்ப்பிணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 8 July 2021 6:08 AM GMT (Updated: 8 July 2021 6:08 AM GMT)

கர்ப்பிணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சீபுரம் அரசு நகர் நல மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் கொரோனோ நோய்த்தொற்று படிப்படியாக குறைந்துள்ளது.

8 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு

கொரோனா தடுப்பூசியின் மூலம் கொரோனா தாக்கம் முற்றிலுமாக தடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனா நோய்த்தொற்றை குறைத்து, இறப்பை தடுப்பதற்கான முக்கிய ஆயுதமாக தடுப்பூசி பயன்படுகிறது.

இதுவரை சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 18 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள 8 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலையின்போது கர்ப்பிணிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். கர்ப்பிணிகளின் இறப்பு விகிதம் அதிகரித்ததோடு குறைபிரசவம், கருச்சிதைவு போன்ற சிக்கல்கள் அதிக அளவில் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கு கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி மிகவும் அவசியமாகிறது. கருத்தரித்தது முதல் பிரசவிக்கும் வரையிலான கர்ப்பகாலத்தில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் போட்டு கொள்ளலாம். கோவேக்சின் தடுப்பூசி முதல் தவணை செலுத்திய 28 நாட்களுக்கு பிறகும் கோவிஷீஸ்ட் தடுப்பூசி முதல் தவணை செலுத்திய 84 நாட்களுக்கு பிறகும் 2-வது தவணை தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.

பிரசவிக்கும் தருவாயில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பிரசவித்த பின்னர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

2 லட்சத்து 9 ஆயிரத்து 48 பேருக்கு

எந்தவித சிக்கலும் இல்லாத கர்ப்பிணி்கள் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவுநோய் போன்ற நோய்தாக்கம் உள்ளவர்கள் கூடுதல் கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகள் உயர்சிகிச்சை மையங்களான அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில் தகுந்த பரிசோதனைக்கு பிறகு தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 48 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியதன் பேரில் கர்ப்பிணி்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. கர்ப்பணிகள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பழனி, காஞ்சீபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story