குரூப்-1 தேர்வு முடிவுகளை அறிவிக்கக் கோரி வழக்கு
குரூப்-1 தேர்வு முடிவுகளை அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,ஜூலை
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பிரோஜா பேகம், மகேந்திரன், கோவிந்தசாமி, அருண், பாலு உள்ளிட்ட 6 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.
முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த 9.2.21 அன்று வெளியானது.
ஆனால் இந்த முதல் நிலை தேர்வு முடிவில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத ஒதுக்கீட்டின்படி முடிவுகள் அறிவிக்கப்படவிலலை. 1-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை அரசு பணிகள் மற்றும் தேர்வுகளில் பின்பற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் 9.2.21 அன்று வெளியான குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு அறிவிப்பை ரத்து செய்து, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையிலும், குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும் சேர்த்து அது தொடர்பான பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி வேலுமணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து, டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story