ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர் கைது


ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர் கைது
x
தினத்தந்தி 9 July 2021 9:56 PM IST (Updated: 9 July 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் சொத்துவரி மதிப்பீடு செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை மாநகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மதுரை, ஜூலை.
மதுரையில் சொத்துவரி மதிப்பீடு செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை மாநகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சொத்துவரி மதிப்பீடுக்கு லஞ்சம்
மதுரை அழகப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் பரிமளா. இவருடைய மகன் ஈசுவரபிரசாத் (வயது 46). இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக 2 கடைகளும், அவரது தாயாருக்கு சொந்தமாக குடோனும் உள்ளன. அந்த 3 கட்டிடங்களுக்கும் சொத்து வரி மதிப்பீடு செய்வதற்காக மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தை அணுகியுள்ளனர்..
பின்னர் இதுதொடர்பாக அழகப்பன் நகர் பகுதிக்கு உரிய மாநகராட்சி 93-வது வார்டு பில் கலெக்டர் ஜெயராமனிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு அவர், 2 கடைகளுக்கு தலா ஆயிரம் ரூபாயும், குடோனுக்கு 2 ஆயிரம் ரூபாயும் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த பணத்தை கொடுக்காமல் சொத்துவரியை மதிப்பீடு செய்து கொடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கைது
இதனால் ஈசுவரபிரசாத் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.  லஞ்சம் கேட்ட மாநகராட்சி ஊழியரை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, சூர்யகலா, ரமேஷ்பிரபு உள்ளிட்ட போலீசார் அவரிடம் ரசாயன பவுடர் தடவிய 4 ஆயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பினர்.
அந்த பணத்தை எடுத்து கொண்டு டி.வி.எஸ் நகர் பகுதியில் உள்ள வரி வசூல் மைய அலுவலகத்திற்கு நேற்று மதியம் ஈசுவரபிரசாத் சென்றார். அங்கு ஜெயராமனிடம் அவர் பணத்தை கொடுத்த போது, அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் மாநகராட்சி அலுவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story