மக்கள் நீதிமன்றத்தில் 804 வழக்குகளுக்கு சுமுக தீர்வு
மதுரை மாவட்ட கோர்ட்டில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 804 வழக்குகளுக்கு சுமுக தீர்வு காணப்பட்டது
மதுரை
மதுரை மாவட்ட கோர்ட்டில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 804 வழக்குகளுக்கு சுமுக தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
மதுரை மாவட்ட கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று நடந்தது. இதில் மதுரை முதன்மை மாவட்ட நீதிபதி வடமலை தலைமையில் 17 அமர்வில் செயல்பட்டது. ஒவ்வொரு அமர்விலும் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி, ஒரு வக்கீல், ஒரு தன்னார்வலர் இடம் பெற்று இருந்தனர்.
இந்த அமர்வுகளில் மொத்தம் 1,113 வழக்குகள் சுமூக தீர்வு காண்பதற்காக எடுத்து கொள்ளப்பட்டன. முடிவில், 804 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 95 லட்சத்து 49 ஆயிரத்து 535-ஐ மக்கள் நீதிமன்றம் மூலம் வழங்கினர்.
பாகப்பிரிவினை வழக்கில் ரூ.5½ கோடி
குறிப்பாக, மதுரையை சேர்ந்த அண்ணன்-தம்பி இடையே பாகப்பிரிவினை தொடர்பாக சிவில் வழக்கு கடந்த 2009-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. பின்னர் இந்த வழக்கில் சுமூக தீர்வு காண்பதற்காக சமரச தீர்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதன்படி இங்கு இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக தீர்வு காணப்பட்டது. பின்னர் அந்த வழக்கில் தொடர்புடையவர், எதிர்தரப்பினருக்கு ரூ.5½ கோடி கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த தொகைக்கான காசோலையை பயனாளிக்கு நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை வழங்கினார்.
சமரசம்
இதுதவிர 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த விபத்து வழக்குகள், நிறைவேறுதல் மனுக்கள் ஆகியவற்றுக்கும் நேற்று சுமுக தீர்வு காணப்பட்டன.
இதேபோல சுமுக தீர்வு காணப்பட்ட மற்ற வழக்குகளின் பயனாளிகளுக்கும் உடனுக்குடன் உரிய தொகை சமரச தீர்வு மையத்திலேயே வழங்கப்பட்டன.
நேற்று நடந்த இந்த மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நல கோர்ட்டு நீதிபதி சுமதி, கூடுதல் மாவட்ட நீதிபதிகள் ரவி, சம்பத்குமார், மதுரை மாவட்ட மக்கள் நீதிமன்றத்தின் நிரந்தர தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ரஜினி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெயகுமாரி ஜெமிரத்னா, சார்பு நீதிபதி செல்வபாண்டி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான தீபா மற்றும் சிவில் கோர்ட்டு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள், இன்சூரன்ஸ் கம்பெனிகள், தன்னார்வலர்கள், வட்ட சட்டப்பணி குழுவினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story