மனு கொடுத்த 2 நாட்களில் ரூ.50 ஆயிரம் கடன் உதவி; காஞ்சீபுர கலெக்டர் நடவடிக்கை


மனு கொடுத்த 2 நாட்களில் ரூ.50 ஆயிரம் கடன் உதவி; காஞ்சீபுர கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 12 July 2021 10:40 AM IST (Updated: 12 July 2021 10:40 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் மற்றும் காஞ்சீபுரம் என 2 வட்டாரங்களில் 101 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாரா துறைகளை 
சேர்ந்த உற்பத்தியாளர்கள் இணைந்த கூட்டமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு தொழில் தொடங்க உள்ளனர்.கடந்த 5-ந் தேதியன்று மாவட்ட கலெக்டரின் மனுநாள் முகாமில் வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியை் சேர்ந்த ரமணி என்ற பெண் தையல் தொழில் மூலம் குறைந்த வருவாய் பெற்று வருவதாகவும், தனது கணவர் கட்டிட வேலைக்கு செல்வதாகவும், தனக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளதாகவும் மாவட்ட கலெக்டரிடம் எடுத்துக்கூறி தனக்கு கூடுதல் வருவாய் ஈட்டிட கடனுதவி ஏற்பாடு செய்து அளித்தால் உதவியாக இருக்குமென மனு அளித்திருந்தார்.மனுவை பரீசீலித்த மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை 
வழங்கினார். இதன் அடிப்படையில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் வாயிலாக மனுவை ஆய்வு செய்து மனு அளித்த 2 நாட்களில் அவர் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தையல் தொழிலை மேம்படுத்திட மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்ற பிற துறை அலுவலர்களுக்கான கூட்டத்தில் கடன் உதவியாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஜெயசுதா, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சீனிவாசராவ், ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story