வீடுகளை காலி செய்ய மறுத்து பொதுமக்கள் மறியல்


வீடுகளை காலி செய்ய மறுத்து பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 12 July 2021 7:40 PM GMT (Updated: 12 July 2021 7:40 PM GMT)

வீடுகளை காலி செய்ய மறுத்து பொதுமக்கள் மறியல் செய்தனர்.

மதுரை, ஜூலை
மதுரை பீ.பி.குளம், முல்லை நகர், மீனாட்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 800 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு இலவச பட்டா வழங்க கோரி சட்ட ரீதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 
இந்த நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை துண்டிக்க மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த அந்த பகுதி மக்கள் பீ.பி.குளம் சந்திப்பு பகுதியில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Next Story