மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா தொடங்கியது


மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா தொடங்கியது
x
தினத்தந்தி 13 July 2021 1:32 AM IST (Updated: 13 July 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை, ஜூலை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆடி முளைக்கொட்டு திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாவாகும். 
இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 22-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
விழாவின் முதல் நாளான நேற்று உற்சவர் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினார். அங்கு திருவிழாவுக்கு காப்பு கட்டிய ரவி பட்டரால் விநாயகர் பூஜை, கும்ப பூஜையுடன் யாகம் வளர்க்கப்பட்டது. அதை தொடர்ந்து காலை 10.25 மணிக்கு மீனாட்சி அம்மன் சன்னதி கொடிமரத்தில் திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது.  மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேற்று இரவு மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதியை வலம் வந்தார்.
வாகனத்தில் வீதி உலா
விழா நாட்களில் மீனாட்சி அம்மன் காலை, இரவு நேரங்களில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
2-ம் நாளான இன்று அன்னம், 3-ம் நாளில் காமதேனு, 4-ம் நாள் யானை, 5-ம் நாள் ரிஷபம், 6-வது நாள் கிளி, 7-வது நாள் மாலை மாற்றுதல், 8-ம் நாள் குதிரை, 9-ம் நாள் இந்திர விமானம், 10-ம் நாள் கனகதண்டியல் வாகனத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்..
நேற்றைய கொடியேற்ற விழாவில் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை, பட்டர்கள் ராஜா, ஹாலஸ், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Next Story