வீட்டு மனை கேட்டு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் குடிசை அமைத்து போராட்டம்


வீட்டு மனை கேட்டு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் குடிசை அமைத்து போராட்டம்
x
தினத்தந்தி 13 July 2021 2:15 AM IST (Updated: 13 July 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

வீட்டு மனை கேட்டு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் குடிசை அமைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு
வீட்டு மனை கேட்டு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் குடிசை அமைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிசை அமைத்து போராட்டம்
ஈரோடு நசியனூர் ரோடு, நல்லி தோட்டம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பொதுமக்கள் சிலர் ஆக்கிரமித்து 6-க்கும் மேற்பட்ட குடிசைகளை அமைத்து, வீட்டு மனை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் அழகர்சாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் வீரப்பன்சத்திரம் பகுதியில் 50 ஆண்டுகளாக நீர் நிலை ஆக்கிரமிப்பில் 166 குடும்பங்கள் வசித்து வந்தோம். நாங்கள் அனைவரும் கூலி தொழிலாளிகள். நீர் நிலை ஆக்கிரமிப்பில் வசித்து வந்ததால் பொதுப்பணித்துறையினர் எங்களை அப்புறப்படுத்தினர்.
பரபரப்பு
இதைத்தொடர்ந்து நாங்கள் பெரியசேமூர், வெட்டுக்காட்டு வலசு போன்ற பகுதிகளில் வசித்து வந்தோம். நீர் நிலை ஆக்கிரமிப்பில் இருந்த 166 குடும்பங்களில் சுமார் 61 பேருக்கு மட்டுமே லக்காபுரம் பகுதியில் வீட்டுமனை ஒதுக்கி தரப்பட்டது. மீதமுள்ள 105 பேருக்கு வீட்டு மனை வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எங்களுக்கு இதுவரை வீட்டு மனை வழங்கவில்லை. இதனால் தான் நாங்கள் இன்று (அதாவது நேற்று) பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் குடிசை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதற்கு அதிகாரிகள், கலெக்டரிடம் உங்களது கோரிக்கை தொடர்பாக எடுத்து கூறி விரைவில் வீட்டு மனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் அந்த பகுதியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story