புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு


புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 July 2021 8:46 PM GMT (Updated: 12 July 2021 8:46 PM GMT)

புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் கேட்டு் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் கேட்டு் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நொச்சிகுட்டை ஊராட்சிக்கு உள்பட்ட பொன்மேட்டில் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் இப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் குடிநீர் சரியாக வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் காலிக்குடங்களுடன் நேற்று காலை 6 மணி அளவில் புளியம்பட்டி-திருப்பூர் ரோட்டில் உள்ள பொன்மேடு பஸ் நிறுத்தம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 
குடிநீர் வழங்கக்கோரி...
இதுபற்றி தகவல் அறிந்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார், சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் மைதிலி ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘கடந்த 5 நாட்களாக எங்கள் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. மேலும் அப்பகுதியில் ஆழ்துளை கிணறும் வறண்டு விட்டது. இதனால் நாங்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே எங்கள் பகுதியில் உடனே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
மற்றொரு இடத்தில்...
இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் மைதிலி கூறும்போது, ‘கொடிவேரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது குடிநீர் குழாய்கள் சரி செய்யப்பட்டுவிட்டது. எனவே உங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் சீராக கிடைக்கும். மேலும் 3 நாட்களுக்குள் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படும்’ என்றார். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல் அதே ரோட்டில் நொச்சிகுட்டையை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் நேற்று காலை 7 மணி அளவில் நொச்சி குட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மரக்கிளைகளை முறிந்து ரோட்டில் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் மைதிலி அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது அவர் பொதுமக்களிடம், ‘உங்கள் பகுதியிலும் குடிநீர் வினியோகம் தடையின்றி கிடைக்கும்’ என்று உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு் கலைந்து சென்றனர். புளியம்பட்டி-திருப்பூர் ரோட்டில் 2 இடங்களில் சாலை மறியல் நடந்ததால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.
வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, பவானிசாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் அங்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கில் சமூக இடைவெளியை பின்பற்றாமால் சாலை மறியலில் ஈடுபட்டதாக 75 பேர் மீது புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.    

Next Story