குறிப்பிட்ட இடத்தில் இறங்குவதை உறுதிசெய்ய அரசு டவுன் பஸ்களில் செல்லும் பெண்களுக்கு இலவச பயண சீட்டு- ஈரோட்டில் நேற்று முதல் கண்டக்டர்கள் வழங்கினர்
அரசு டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் குறிப்பிட்ட நிறுத்தத்தில் இறங்குவதை உறுதி செய்யும் வகையில் இலவச பயண சீட்டுகளை கண்டக்டர்கள் நேற்று வழங்க தொடங்கினார்கள்.
ஈரோடு
அரசு டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் குறிப்பிட்ட நிறுத்தத்தில் இறங்குவதை உறுதி செய்யும் வகையில் இலவச பயண சீட்டுகளை கண்டக்டர்கள் நேற்று வழங்க தொடங்கினார்கள்.
இலவச பயணம்
தமிழ்நாட்டில் பெண்கள் வேலை மற்றும் பிற தேவைகளுக்காக பஸ்களில் சென்று வரும்போது அவர்கள் அரசு டவுன் பஸ்களில் பயணம் செய்ய இலவச அனுமதி அளிக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று, முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும், அவரது தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை அனுமதித்து உத்தரவிட்டார். பெண்கள் மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் உடன் வரும் ஒருவர் மற்றும் 3-ம் பாலினத்தவர்களுக்கும் இலவச பயண அனுமதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பயண சீட்டு
அதன்படி கடந்த மே மாதம் முதல் இலவச பயண திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ்கள் இயக்கப்படவில்லை. மீண்டும் ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டதால் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 5-ந் தேதி முதல் பஸ்கள் இயக்கம் தொடங்கியது. அதுமுதல் அனுமதிக்கப்பட்ட அரசு பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், உடன் வருபவர் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டது.
அரசு பஸ்களில் இலவச பயணம் செய்பவர்களுக்கு இலவச பயண சீட்டு வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதற்கான பயண சீட்டுகள் நேற்று முதல் ஈரோட்டில் பயணிகளுக்கு கண்டக்டர்கள் வழங்கினார்கள்.
ஆண்களுக்கு டிக்கெட்
மகளிர், திந (திருநங்கைகள்), மா (மாற்றுத்திறனாளிகள்), மாஉ (மாற்றுத்திறனாளிகளின் உடன் வருபவர்கள்) என்று 4 வித இலவச பயண சீட்டுகளை கண்டக்டர்கள் உரிய பயணிகளுக்கு வழங்கினார்கள்.
ஆண்கள் வழக்கம்போல டிக்கெட் வாங்கி பயணம் செய்தனர். பெண்களுக்கு இலவசம் என்று எழுதப்பட்ட பஸ்களில் பெரும்பாலும் பெண்கள் மட்டுமே இருந்தனர். இதனால் அவை மகளிர் பஸ்கள் போன்றே ஓடின.
கூடுதல் பஸ்கள்
ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கடந்த வாரம் ஈரோடு மாவட்டத்தில் 60 சதவீதம் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. கொரோனா தொடர்பான அச்சம் காரணமாக பஸ்களில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. காலை, மாலை நேரங்களில் வேலைகளுக்கு சென்று திரும்பும் பொதுமக்களால் சில பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.
டவுன் பஸ்களில் கூட்டம் இருந்தாலும், வெளியூர் பஸ்களில் குறைந்த பயணிகளே சென்றனர். இதனால் பயணிகள் இருந்தால் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. இந்தநிலையில் இன்று (அதாவது நேற்று) கூடுதலாக 195 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முதல் ஈரோடு மாவட்டத்தில் 570 பஸ்கள் இயங்குகின்றன. இதுபோல் நேற்று முதல் ஈரோடு மாவட்டத்தில் புதுச்சேரி மாநிலத்துக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. தினசரி காலை 6.20 மணிக்கும் இரவு 8.40 மணிக்கும் புதுச்சேரி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
Related Tags :
Next Story