செல்போனை போலீஸ் ஏட்டு பறித்து கொண்டதால் ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து தற்கொலை


செல்போனை போலீஸ் ஏட்டு பறித்து கொண்டதால் ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து தற்கொலை
x
தினத்தந்தி 13 July 2021 1:33 AM GMT (Updated: 13 July 2021 1:33 AM GMT)

போலீஸ் ஏட்டு சந்தேகத்தின்பேரில் விசாரணைக்கு வரும்படி கூறி செல்போனை பறித்து கொண்டதால் பாட்டில் துண்டால் கழுத்தை அறுத்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடி,

திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் அய்யப்பன் நகர் ஓம்சக்தி தெருவைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 34). ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்த இவருடைய நண்பர் பிரதீப் (30). இவரும் ஆட்டோ டிரைவர்தான்.

நேற்று காலை பாக்யராஜ், தனது ஆட்டோவில் நண்பர் பிரதீப்புடன் ஜமுனா நகர் பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு ரோந்து வந்த திருமுல்லைவாயல் போலீஸ் ஏட்டு சந்தோஷ், இருவரிடமும் சந்தேகத்தின்பேரில் நீங்கள் யார்?, எதற்காக இங்கு நிற்கிறீர்கள்? என்று விசாரித்தார்.

பின்னர் அவர்களிடம் இருந்து 2 செல்போன்களையும் வாங்கிய ஏட்டு, ஆட்டோவுடன் இருவரும் விசாரணைக்கு போலீஸ் நிலையம் வரும்படி கூறினார். அத்துடன் தனது செல்போனில் இருவரையும் புகைப்படம் எடுத்தார்.

அதற்கு பாக்யராஜ், நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எதற்காக விசாரணைக்கு வரவேண்டும் என கூறி போலீஸ் நிலையம் செல்ல மறுத்து தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ஏட்டு சந்தோஷ், பாக்யராஜின் கன்னத்தில் ‘பளாரென்று’ அறைந்ததாக கூறப்படுகிறது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பாக்யராஜ், அங்கு கிடந்த உடைந்த பீர் பாட்டில் துண்டை கையில் எடுத்துக்கொண்டு, “நாங்கள் என்ன தப்பு செய்தோம்? எங்களை ஏன் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு கூப்பிடுகிறீர்கள்?. எங்கள் போனை திருப்பி கொடுங்கள். இல்லை என்றால் பாட்டில் துண்டால் எனது கழுத்தை அறுத்துக்கொள்வேன்” என்றார்.

அதற்கு விளையாட்டாக கூறுவதாக நினைத்த போலீஸ் ஏட்டு சந்தோஷ், “நீ சரியான ஆம்பளை என்றால் அறுத்துக்கொள்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

உடனே பாக்யராஜ், யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென கண்ணாடி துண்டால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஏட்டு, 2 பேரின் செல்போன்களை வீசிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றதாக தெரிகிறது.

உடனே பாக்யராஜின் நண்பர் பிரதீப், ஏட்டுவின் மோட்டார் சைக்கிள் சாவியை எடுத்துக்கொண்டார். பின்னர் இருவரும் சேர்ந்து அந்த வழியாக சென்ற ஒருவரின் உதவியுடன் பாக்யராஜை ஆட்டோவில் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர்.

அதற்குள் ஏட்டு அங்கிருந்து நைசாக சென்றுவிட்டதாக தெரிகிறது. பின்னர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பாக்யராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரதீப் அளித்த புகாரின் பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story