பர்கூரில் வீடு, காரை சூறையாடிய ஒற்றை யானை
பர்கூரில் வீடு, காரை ஒற்றை யானை சூறையாடியது.
பர்கூரில் வீடு, காரை ஒற்றை யானை சூறையாடியது.
ஒற்றை யானை
அந்தியூர் அருகே பர்கூரில் உள்ள கொங்காடை மலைக்கிராமத்துக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒற்றை யானை புகுந்தது. அப்போது ராமன் (வயது 50) என்பவரது வீட்டிற்கு அருகில் யானை வந்தது. யானையை பார்த்ததும் அங்குள்ள நாய்கள் குரைக்க தொடங்கின. இதனால் வெளியே எட்டி பார்த்த ராமன், யானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவரும், குடும்பத்தினரும் வீட்டில் இருந்து வெளியே வராமல் உள்ளேயே அச்சத்துடன் பதுங்கினார்கள். அப்போது வீட்டுக்கு முன்பு வைத்திருந்த பலாப்பழத்தையும், உணவு பொருட்களையும் யானை தனது துதிக்கையால் எடுத்து தின்றது. மேலும், வீட்டுக்கு முன்பு உள்ள பொருட்கள், கூரையை எடுத்து விலாசியது.
2 மணி நேரம்
பலாப்பழத்தை தின்ற பிறகு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரை தனது துதிக்கையால் சேதப்படுத்தியது. இந்த சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு திரண்டார்கள். அவர்கள் யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். தகர டப்பாக்கள் மூலமாக ஒலி எழுப்பியும், தீப்பந்தத்தை கைகளில் ஏந்தியும் யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. காட்டு யானை கிராமத்துக்குள் புகுந்து வீடு, காரை சூறையாடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story