பர்கூர் தாமரைக்கரையில் நடுரோட்டில் நின்று வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய யானை
பர்கூர் தாமரைக்கரையில் நடுரோட்டில் நின்று வாகன ஓட்டிகளை ஒற்றை யானை அச்சுறுத்தியது.
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரையில் சுண்டப்பூர் பிரிவு உள்ளது. அங்கு நேற்று முன்தினம் மாலை 5 மணிஅளவில் ஒற்றை காட்டு யானை தாமரைக்கரை-பர்கூர் ரோட்டில் வந்து நின்றது. அப்போது அங்கும், இங்குமாக நடமாடிய அந்த யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் சாலையிலேயே சுற்றி வந்தது. இதனால் அந்தியூரில் இருந்து பர்கூர் நோக்கி சென்ற வாகனங்களும், மைசூரில் இருந்து அந்தியூர் நோக்கி வந்த வாகனங்களும் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
எந்த வாகனங்களும் செல்ல முடியாத வகையில் யானை அங்கேயே சுற்றி வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் யானை சென்று மறைந்தது. அதன்பிறகு அந்த வழியாக போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் தங்களது செல்போன்களில் காட்டு யானையை தூரமாக நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்கள். யானை நடுரோட்டில் நின்றதால் அங்கு ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story