13 ஆயிரம் கிராமங்களில் பா.ஜ.க. கொடிக்கம்பம் அமைக்கப்படும்
தமிழ்நாட்டில் 13 ஆயிரம் கிராமங்களில் பா.ஜ.க. கொடிக்கம்பம் அமைக்கப்படும் என்று ஈரோட்டில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
தமிழ்நாட்டில் 13 ஆயிரம் கிராமங்களில் பா.ஜ.க. கொடிக்கம்பம் அமைக்கப்படும் என்று ஈரோட்டில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
வரவேற்பு
தமிழக பா.ஜனதா கட்சியின் புதிய மாநில தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பா.ஜனதா தலைவராக பதவி ஏற்க உள்ளார். இந்தநிலையில் நேற்று ஈரோடு வந்த அவருக்கு ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பா.ஜனதா மாநில நிர்வாகியும் மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சி.சரஸ்வதி தலைமையில் மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்றனர். அவருக்கு கோவில் குருக்கள் பூரண கும்பம் மற்றும் பரிவட்டம் கட்டி வரவேற்றனர். அப்போது கூடி இருந்த பா.ஜனதா தொண்டர்கள் பூக்கள் தூவியும் வரவேற்றனர்.
150 எம்.எல்.ஏ.க்கள்
பின்னர் அங்கு கூடி இருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக சட்டமன்றத்தில் நமது மொடக்குறிச்சி தொகுதி உள்பட 4 தொகுதிகளில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் கதவுகளை திறந்து காலடி வைத்து உள்ளனர். இது ஒரு நல்ல தொடக்கமாக உள்ளது. அடுத்த 2026-ம் ஆண்டில் 150 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தமிழக சட்டமன்றத்தில் இருப்பார்கள். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மேற்கு வங்கத்தில் 2016-ம் ஆண்டு 3 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் நுழைந்தார்கள். இப்போது 77 பேர் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இதுபோல் அனைத்து மாநிலங்களிலும் முதலில் நுழைவதுதான் கடினம். அப்படித்தான் தமிழக சட்டமன்றத்தில் 4 பேர் நுழைந்து இருக்கிறோம்.
ஈரோட்டில் இருந்து எம்.பி.
ஒரு நல்ல வேட்பாளர், ஒரு நல்ல கட்சி என்று 2-ம் இணையும்போது சிறந்த வெற்றியை பெற முடியும். அதுபோலத்தான் மொடக்குறிச்சி தொகுதியில் நல்ல வேட்பாளர், நல்ல கட்சி இணைந்து வெற்றியை பெற்று இருக்கிறோம். வரும் காலத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்கு செல்வார்கள்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி எம்.பி. பா.ஜனதா சார்பில் வெற்றி பெறுவார். ஏன் என்றால் ஈரோட்டில் பா.ஜனதா கட்சி மேலும் வளரும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கு சித்தாந்தத்தை நம்பும் மக்கள் உள்ளனர். நல்லவர்கள், விவசாய பெருமக்கள் இருக்கிறார்கள். ஆன்மிகம் வேரூன்றி உள்ள மண். எனவே கட்சியின் கொள்கைகளை பொதுமக்களுக்கு புரிய வைத்தால் போதும். இதன் மூலம் 2024-ல் எம்.பி.யும், 2026-ல் ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் வருவார்கள்.
புதுரத்தம்
என்னைபொறுத்தவரை தலைவர் பதவி என்பது பதவி அல்ல. சேவகம் செய்யும் பதவி. மக்கள் சேவைக்காக இந்த பதவியை பயன்படுத்துவேன். வருங்காலத்தில் தமிழ்நாட்டில் நமக்கு 30 எம்.எல்.ஏ. அல்லது 50 எம்.எல்.ஏ. பெற வேண்டும் என்ற இலக்குடன் நாம் பயணிக்க மாட்டோம். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா ஆகியோரின் எண்ணங்களை நிறைவேற்ற வேண்டும். இதற்காக கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் பணியாற்றியவர்கள் இருக்கிறார்கள். என்னைப்போன்ற இளைஞர்களும் இருக்கிறார்கள். அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் கிராமங்களிலும் பா.ஜனதா கொடிகம்பம் அமைக்கப்படும். கிராமங்களின் சுவர்களில் பா.ஜனதா சின்னமான தாமரை வரையப்படும். இதன் மூலம்தான் வெற்றியை பெற முடியும். ஏற்கனவே கட்சியில் பணியாற்றி ஒதுங்கி இருப்பவர்களையும், புதியஇளைஞர்களையும் ஒருங்கிணைத்து கட்சியை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்வோம்.
இவ்வாறு பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
மலர் மாலை
இந்த வரவேற்பு நிகழ்ச்சியின்போது ஜெயசூர்யாஸ் டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் டி.நவநீத கிருஷ்ணன் உள்பட பலர் மலர் மாலை, சால்வை அணிவித்து வரவேற்றனர்.
மாநில நிர்வாகிகள் நரேந்திரன், செல்வகுமார், ஆ.சரவணன், பொன்.ராஜேஸ்குமார், என்.பி.பழனிச்சாமி, நா.விநாயகமூர்த்தி, மோகனப்பிரியா, மாவட்ட நிர்வாகிகள் குணசேகரன், ஈஸ்வரமூர்த்தி, விவேகானந்தன், முருகானந்தம், சந்தோஷ்குமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story