கல்லூரிகளில் அமைக்கப்பட்டு இருந்த 2 தற்காலிக சிகிச்சை மையங்கள் மூடல்


கல்லூரிகளில் அமைக்கப்பட்டு இருந்த 2 தற்காலிக சிகிச்சை மையங்கள் மூடல்
x
தினத்தந்தி 15 July 2021 3:39 AM IST (Updated: 15 July 2021 3:39 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு குறைந்ததால் கல்லூரிகளில் அமைக்கப்பட்டு இருந்த 2 தற்காலிக சிகிச்சை மையங்கள் மூடப்பட்டு உள்ளன.

கொரோனா பாதிப்பு குறைந்ததால் கல்லூரிகளில் அமைக்கப்பட்டு இருந்த 2 தற்காலிக சிகிச்சை மையங்கள் மூடப்பட்டு உள்ளன.
2-வது அலை
கொரோனா வைரஸ் 2-வது அலை பரவல் காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் தினசரி 1,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசின் உத்தரவின்பேரில், ஈரோடு மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும் வகையில், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா தலைமை சிகிச்சை மையமாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் ஈரோடு, கோபி, பவானி, சத்தி, அந்தியூர், பெருந்துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளிலும் தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
2 மையங்கள் மூடல்
இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சில தனியார் கல்லூரிகள், பள்ளிக்கூடங்களில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள் (கோவிட் கேர் சென்டர்) அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 200-க்கும் கீழ் குறைந்துள்ளதால், தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வேளாளர் கல்லூரி மற்றும் நந்தா கல்லூரியில் தலா 250 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள் மூடப்பட்டது. மேலும் அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கல்லூரி நிர்வாகத்திடம் மீண்டும் கல்லூரி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story