பாடம் எடுக்காமல் தேர்வு வைக்காமலேயே மதிப்பெண்கள் வழங்க கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்


பாடம் எடுக்காமல் தேர்வு வைக்காமலேயே மதிப்பெண்கள் வழங்க கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்
x
தினத்தந்தி 15 July 2021 3:51 AM IST (Updated: 15 July 2021 3:51 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கூடங்கள் இயங்காததால் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்தது. ஆனால், கல்வித்துறை அதிகாரிகள் மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண்கள் போட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதால் பள்ளி நிர்வாகத்தினர் குழப்பத்தில் உள்ளனர்.

பள்ளிக்கூடங்கள் இயங்காததால் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்தது. ஆனால், கல்வித்துறை அதிகாரிகள் மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண்கள் போட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதால் பள்ளி நிர்வாகத்தினர் குழப்பத்தில் உள்ளனர்.
அதிருப்தி
 தமிழ்நாட்டில் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் இறுதி தேர்வு எழுத தயாராக இருந்தாலும் தமிழக அரசு கொரோனா காரணமாக, மாணவ-மாணவிகள் நலன் கருதி தேர்வினை முற்றிலும் ரத்து செய்தது. பிளஸ்-1 வகுப்பில் பொதுவாகவே மாணவ-மாணவிகளின் மதிப்பெண்கள் குறைவாக இருக்கும். பல பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 வில் அதிக மதிப்பெண்கள் பெற சிரத்தையுடன் படிக்க வேண்டும் என்பதற்காக பிளஸ்-1 வகுப்பில் தேர்வுத்தாள்களை மிகவும் கட்டுப்பாடுடன் திருத்துவது வழக்கம்.
இதனால் அவர்கள் பிளஸ்-1 வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும் பிளஸ்-2 வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று, உயர் கல்விக்கு செல்வார்கள். ஆனால், கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டதால், பிளஸ்-1 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் இறுதி தேர்வு மதிப்பெண்களில் சேர்க்கப்படும் என்பது மாணவ-மாணவிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
மதிப்பெண் பட்டியல்
 1-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்புவரை அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்கள் வழங்க கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கூடங்களுக்கு சுற்று அறிக்கை அனுப்பி இருக்கிறார்கள். இது தற்போது தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி தனியார் பள்ளிக்கூட முதல்வர் ஒருவர் கூறியதாவது:-
எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்புவரை முற்றிலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டு விட்டது. பிளஸ்-2 மாணவ-மாணவிகள் உயர் கல்விக்கு செல்ல மதிப்பெண்கள் மிகவும் அவசியம். இதுபோல் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் உயர் கல்விக்கு மதிப்பெண்கள் அவசியமாக உள்ளது. முறையாக வகுப்புகள் நடைபெறாத நிலையில் மாணவர்களின் மதிப்பெண் வழங்குவது மிகவும் சிரமமாகும்.
குழப்பம்
இந்தநிலையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையும், 11-ம் வகுப்புக்கும் மதிப்பெண்கள் வழங்கி பட்டியலை பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்த பிறகு, இந்த மதிப்பெண்கள் வழங்கும் முறை எதற்கு என்று தெரியவில்லை.
தனியார் பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை அந்தந்த பள்ளி நிர்வாகங்களின் கட்டாயத்தின்பேரில் ஆசிரிய-ஆசிரியைகள் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள், வாட்ஸ்அப் வகுப்புகள் மூலம் தேர்வுகளும் நடத்தி இருந்தனர். அதன் மூலம் மதிப்பெண்கள் வழங்குவது எளிதுதான். அதே நேரம் அரசு பள்ளிக்கூடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன்களே இல்லாத நிலை உள்ளது. கிராமப்புறங்களில் இன்டர்நெட் வசதி இருக்காது. ஆசிரியர்கள் பாடம் எடுப்பதிலும் சிரமம், குழந்தைகள் பாடம் கவனிப்பதிலும் சிரமம். இந்த சூழலில் மதிப்பெண் பட்டியல் இணைப்பு என்பது கூடுதல் பணிச்சுமையாக உள்ளது. அரசு வகுப்புகள் இல்லை அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்து விட்டது. ஆனால் கல்வித்துறை அதிகாரிகள் மதிப்பெண் பட்டியல் கேட்டு இருக்கிறார்கள். தற்போது நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. ஆசிரிய-ஆசிரியைகள், பள்ளிக்கூட நிர்வாகத்தினர் அதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் இந்த பணி ஆசிரியர்கள், கல்விக்கூட நிர்வாகத்தினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story