மோட்டார் சைக்கிள் மீது எருமை மாடு மோதி விபத்து: கணவருடன் சென்ற அரசு பள்ளிக்கூட ஆசிரியை பலி
மோட்டார் சைக்கிள் மீது எருமை மாடு மோதிய விபத்தில், கணவருடன் சென்ற அரசு பள்ளிக்கூட ஆசிரியை பலியானார்.
ஈரோடு
மோட்டார் சைக்கிள் மீது எருமை மாடு மோதிய விபத்தில், கணவருடன் சென்ற அரசு பள்ளிக்கூட ஆசிரியை பலியானார்.
ஆசிரியை
ஈரோடு வி.மேட்டுப்பாளையம் ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (வயது 42). மெடிக்கல் ஏஜென்சி உரிமையாளர். இவரது மனைவி சிவகாமசுந்தரி (38). இவர் ஈரோடு திண்டல் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்-மனைவி 2 பேரும் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் சென்னிமலை ரோட்டில் ஈரோடு நோக்கி சென்று கொண்டு இருந்தனர். முத்தம்பாளையம் பால் பண்ணை அருகே சென்றபோது, ரோட்டோரம் கட்டப்பட்டிருந்த எருமை மாடு திடீரென கயிற்றை அறுத்துக்கொண்டு, ரோட்டின் குறுக்கே வந்து முத்துக்கிருஷ்ணன் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது.
சாவு
இதில் நிலைதடுமாறி முத்துக்கிருஷ்ணனும், சிவகாமசுந்தரியும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் முத்துக்கிருஷ்ணனுக்கு லேசான காயமும், சிவகாமசுந்திரிக்கு தலை, தோள்பட்டையில் பலத்த காயமும் ஏற்பட்டது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சிவகாமசுந்தரியை மீட்டு, 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிவகாமசுந்தரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி, விபத்து ஏற்படும் வகையில் எருமை மாட்டினை ரோட்டோரம் கட்டிய அதன் உரிமையாளர் மணியாளி என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story