ஆசனூர் அருகே மின்தடையால் 5 நாட்களாக தவிக்கும் மலைக்கிராம மக்கள்- குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதி


ஆசனூர் அருகே மின்தடையால் 5 நாட்களாக தவிக்கும் மலைக்கிராம மக்கள்- குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதி
x
தினத்தந்தி 16 July 2021 4:48 AM IST (Updated: 16 July 2021 4:48 AM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் அருகே மின்தடையால் 5 நாட்களாக மலைக்கிராம மக்கள் தவித்து வருகிறார்கள். மேலும், குடிநீர் கிடைக்காமல் அவர்கள் பெரும் அவதி அடைந்தனர்.

தாளவாடி
ஆசனூர் அருகே மின்தடையால் 5 நாட்களாக மலைக்கிராம மக்கள் தவித்து வருகிறார்கள். மேலும், குடிநீர் கிடைக்காமல் அவர்கள் பெரும் அவதி அடைந்தனர்.
மின்தடை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராஜன்நகர் பகுதியில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக ஆசனூர் அருகே கேர்மாளம், திங்களூர் ஆகிய 2 ஊராட்சிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள சிக்குன்சேபாளையம், தலுதி, பூதாளபுரம், காடட்டி, பேடர்பாளையம், காடுபசுவன்மாளம், சுஜில்கரை, கோட்டமாளம், வைத்திய நாதபுரம், மந்தை தொட்டி உள்பட 30-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த மின்கம்பிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு உள்ளதால், ஆங்காங்கே பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேலும், குறைந்த அழுத்த மின்சாரம் மட்டுமே மலைக்கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த மின் இணைப்பை பயன்படுத்தி விவசாய மின் மோட்டார்கள் மற்றும் ஊராட்சி சார்பில் குடிநீர் மின் மோட்டார்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
குடிநீர்
இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி மதியம் 2 மணிஅளவில் ஆசனூர் அருகே உள்ள மலைக்கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பில் உள்ள பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்கள். அதன்பிறகு பழுது நீக்கப்பட்டு நேற்று முன்தினம் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் இருமுனை மின்சாரம் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டதால், குடிநீருக்கான மின் மோட்டாரை இயக்க முடியவில்லை. மேலும், நள்ளிரவில் மீண்டும் மின் தடை ஏற்பட்டது. இதன்காரணமாக கடந்த 5 நாட்களாக மின்சார வசதி இல்லாததால் மலைக்கிராம மக்கள் கடுமையாக தவித்து வருகிறார்கள்.
வனவிலங்குகள்
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “5 நாட்களாக மின்தடை ஏற்பட்டு உள்ளதால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறோம். குறிப்பாக மின் மோட்டாரை இயக்க முடியாததால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். மேலும், வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் இரவில் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே எங்களுக்கு சீரான மின் வினியோகம் வழங்க வேண்டும்”, என்றனர்.

Next Story