100-வது பிறந்தநாள்: என்.சங்கரய்யாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்


100-வது பிறந்தநாள்: என்.சங்கரய்யாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 16 July 2021 6:37 PM IST (Updated: 16 July 2021 6:37 PM IST)
t-max-icont-min-icon

100-வது பிறந்தநாளை கொண்டாடிய என்.சங்கரய்யாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவரின் தியாகத்தையும், எளிமையையும் போற்றுவதாக புகழாரம் சூட்டினார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா நேற்று தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடினார். என். சங்கரய்யாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் வாழ்த்து அறிக்கை ஒன்றையும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழரும் - தமிழ்நாட்டு அரசியலில் மூத்த தலைவரும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொடக்க கால உறுப்பினருமான என்.சங்கரய்யா 100-வது வயதை காணும் சிறப்பு மிக்க நாள். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் 100 வயதை தொட்டு, பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டும் தியாகவாழ்வுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார் சங்கரய்யா.

கருணாநிதியின் தலைவர்

8 ஆண்டுகள் சிறைவாசம் - 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை என இன்னல்களை இன்முகத்துடன் எதிர்கொண்டு, தியாகத்தின் அடையாளமாக விளங்கும் பொதுவுடைமை இயக்கத்தலைவர் சங்கரய்யா திராவிட இயக்கத்துடன் மக்கள் நலன் சார்ந்து இணைந்து நின்றவர்.

தேர்தல் அரசியலில் தி.மு.க.வுடன் உடன்பட்டும், முரண்பட்டும் இருந்தாலும் கருணாநிதியின் பெருமதிப்பிற்குரிய தலைவராவார்.

மகிழ்கிறேன்

வாழும் வரலாறாக நூறாவது பிறந்தநாள் காணும் சங்கரய்யா மேலும் பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்து என்னை போன்றவர்களுக்கு பொதுவாழ்க்கை பயணத்தில் வழிகாட்டிட வேண்டும் என்ற அன்புடனும் ஆவலுடனும் நேரில் வந்து வாழ்த்தி - வாழ்த்துகளை பெற்று கொள்கிறேன். சங்கரய்யாவின் தியாகத்தையும் எளிமையையும் போற்றுகிறேன்.

முதல்-அமைச்சர் என்ற முறையில் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நூற்றாண்டு வாழ்த்துகளை அவருக்கு வழங்கி மகிழ்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அரசியல் தலைவர்கள் வாழ்த்து

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. டி.கே.ரெங்கராஜன், சி.ஐ.டி.யு. தலைவர் அ.சவுந்தரராஜன் ஆகியோரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுச்செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் இரா.முத்தரசன், மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் டி.மகேந்திரன், துணை செயலாளர் மு.வீரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் பெரியசாமி உள்பட நிர்வாகிகளும் என்.சங்கரய்யாவுக்கு வாழ்த்துகள் கூறினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர் எம்.பி., கே.வி.தங்கபாலு, திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நவாஸ்கனி எம்.பி. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்துகள் கூறினர்.

மேலும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் வாழ்த்து

இதேபோல் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கட்சியின் அமைப்பு செயலாளரும், செய்தி தொடர்பாளருமான சி.பொன்னையன் நேரில் சென்று, சங்கரய்யாவுக்கு பொன்னாடை போர்த்தி, வாழ்த்துகளை தெரிவித்தார்.

Next Story