ஆடி மாதம் பிறப்பு: கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி மாதம் பிறப்பு: கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 17 July 2021 8:26 PM GMT (Updated: 17 July 2021 8:26 PM GMT)

ஆடி மாதம் பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அங்கு பக்தர்கள் கூடுவதை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஆடி மாதம் பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அங்கு பக்தர்கள் கூடுவதை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஆடி மாதம்
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் நடத்தப்படும். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
இந்தநிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தன. தற்போது தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து கோவில்கள் திறக்கப்பட்டு உள்ளன. இருந்தாலும், திருவிழாக்கள் நடத்தவும், பக்தர்கள் கூட்டமாக கூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு அலங்காரம்
நேற்று ஆடி மாதம் பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. அதேசமயம் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
கோவிலில் பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் ஈரோடு டவுன் போலீசார் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் கூட்டமாக நின்று தரிசனம் செய்யவும், கோவிலின் முன்பு சூடம் ஏற்றவும் போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும், கோவில் வளாகத்தில் பக்தர்கள் உட்காரவும், நிற்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வந்ததும், அம்மனை தரிசனம் செய்துவிட்டு உடனடியாக வெளியில் சென்றார்கள்.
இதேபோல் சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன், கருங்கல்பாளையம் சின்ன-பெரிய மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

Next Story