சத்தி வனப்பகுதியில் பரவலாக மழை மலைப்பகுதி மரம், செடி, கொடிகள் பசுமை மயமாக மாறியது சுதந்திரமாக உலா வரும் வனவிலங்குகள்


சத்தி வனப்பகுதியில் பரவலாக மழை மலைப்பகுதி மரம், செடி, கொடிகள் பசுமை மயமாக மாறியது சுதந்திரமாக உலா வரும் வனவிலங்குகள்
x
தினத்தந்தி 18 July 2021 3:12 AM IST (Updated: 18 July 2021 3:12 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் வனப்பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளதால், மலைப்பகுதி மரம், செடி, கொடிகள் பசுமை மயமாக மாறியது. இதனால் வனவிலங்குகள் சுதந்திரமாக உலா வருகின்றன.

சத்தியமங்கலம் வனப்பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளதால், மலைப்பகுதி மரம், செடி, கொடிகள் பசுமை மயமாக மாறியது. இதனால் வனவிலங்குகள் சுதந்திரமாக உலா வருகின்றன.
வனவிலங்குகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தாளவாடி, ஜீர்கள்ளி, தலமலை, கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம் உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகின்றன. கோடைகாலங்களில் நீர்நிலைகள் வறண்டுவிடும். மேலும் மரம், செடி,கொடிகள் காய்ந்து புல்தரைகளும் வறட்சியாக காணப்படும்.
அப்போதெல்லாம் வனவிலங்குகள் அடர்ந்த வனப்பகுதிக்குள்தான் அதிகம் காணப்படும். அங்குதான் அவைகளுக்கு சொற்ப தீவனம் கிடைக்கும். நடுக்காட்டில் ஓடையில் காணப்படும் தண்ணீரை குடித்து தாகம் தீர்த்துக்கொள்ளும். ஆனால் யானைகள் தான் தீவனத்தைதேடி வனப்பகுதியையொட்டிய கிராமங்களுக்கும் வந்துவிடுவது வழக்கம்.
கடும் வறட்சி
 கடந்த மாதம் தொடக்கம் வரை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் வனவிலங்குகள் தீவனம் மற்றும் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டன. இந்தநிலையில் கடந்த மாதம் இறுதி முதல் வனப்பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
 தொடர்ந்து பெய்து வரும் மழையால் தற்போது சத்தியமங்கலம்  மலைப்பகுதியில் புல் மற்றும் செடி, கொடிகள் துளிர்த்து பசுமையாக காட்சி அளிக்கிறது. 
பசுமை மயம்
மேலும் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. வன ஓடைகளிலும் தண்ணீர் செல்கிறது.
இதனால் சத்தியமங்கலம் வனப்பகுதி பசுமை மயமாக காட்சி அளிக்கிறது.  வனவிலங்குகளுக்கு தீவனங்கள் மற்றும் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. 
உலா வருகின்றன
யானை, காட்டெருமைகள்,  புள்ளிமான்கள் ஒரேபகுதியில் அதிகமாக காணப்படுகிறது.  துள்ளி ஓடும் புள்ளிமான்கள் காண்போரை கவருவதாக உள்ளது.  தற்போது எங்கும் தீவனம், தண்ணீர் கிடைப்பதால் வனவிலங்குகள் அடர்ந்த வனப்பகுதியைவிட்டு சாலையோர பகுதிக்கும் சுதந்திரமாக உலா வருகின்றன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் புள்ளிமான்கள் அதிகமாக குட்டிகளோடு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story