ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளில் இருப்பு வைக்கும் விவசாய விளைபொருட்களுக்கு 75 சதவீதம் பொருளீட்டுக்கடன் வேளாண்மை துறை துணை இயக்குனர் தகவல்


ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளில் இருப்பு வைக்கும் விவசாய விளைபொருட்களுக்கு 75 சதவீதம் பொருளீட்டுக்கடன் வேளாண்மை துறை துணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 18 July 2021 9:28 PM GMT (Updated: 18 July 2021 9:28 PM GMT)

ஈரோடு மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு உள்ள விவசாய விளைபொருட்களுக்கு 75 சதவீதம் பொருளீட்டுக்கடன் பெறலாம் என்று வேளாண்மை துறை துணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு
ஈரோடு மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு உள்ள விவசாய விளைபொருட்களுக்கு 75 சதவீதம் பொருளீட்டுக்கடன் பெறலாம் என்று வேளாண்மை துறை துணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
விற்பனைக்கூடங்கள்
ஈரோடு மாவட்ட விற்பனைக்குழு முதுநிலை செயலாளரும், வேளாண்மை துணை இயக்குனருமான சாவித்திரி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட விற்பனைக்குழு மூலம் ஈரோடு, பெருந்துறை, பூதப்பாடி, அந்தியூர், அவல்பூந்துறை, கோபி, கவுந்தப்பாடி, கொடுமுடி, மைலம்பாடி, புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், சிவகிரி, தாளவாடி, எழுமாத்தூர், பவானி, வெள்ளாங்கோவில், வெப்பிலி, அறச்சலூர், மொடக்குறிச்சி ஆகிய 19 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்த விற்பனைக்கூடங்கள் மூலம் மஞ்சள், தேங்காய், கொப்பரை தேங்காய், மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி, எள், கரும்பு சர்க்கரை, சூரியகாந்தி விதைகள் ஆகியவை ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு விற்பனைக்கூடத்துக்கும் அந்தந்த பகுதியில் விளையும் முக்கிய விவசாய விளைபொருட்களின் அடிப்படையில் விற்பனை மையம் ஒதுக்கப்பட்டு உள்ளது. வாரம்தோறும் குறிப்பிட்ட நாட்களில் விற்பனை நடைபெறும்.
அதிக விலை
விவசாயிகள் கொண்டு வரும் விவசாய விளைபொருட்கள் அனைத்தும் வெளிப்படையான ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் அதிக அளவில் பங்கேற்று பொருட்கள் வாங்குவதால் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கிறது. இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் பொருட்களை வாங்குகிறார்கள். விலை முடிக்கப்பட்ட பொருட்களுக்கான தொகை நேரடியாக வங்கி மூலம் தாமதம் இன்றி வழங்கப்படுகிறது.
விவசாயிகள் கொண்டு வரும் விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என்றால் அவற்றை இருப்பு வைக்க கிடங்கு வசதிகள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 6 இடங்களில் குளிர்பதன கிடங்குகளும் உள்ளன. கொப்பரை தேங்காய், மஞ்சள் ஆகியவற்றை நிறம் மாறாமல் உலர்த்தும் சூரிய உலர்த்தி பெருந்துறை மற்றும் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ளன.
75 சதவீதம் கடன்
இந்த வசதிகள் மட்டுமின்றி, கிடங்குகளில் பொருட்களை இருப்பு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பொருளீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. கிடங்குகளில் இருப்பு வைத்து உள்ள விவசாய விளைபொருட்களின் மதிப்பில் 75 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை பொருளீட்டுக்கடன் வழங்கப்படும். இதற்கு 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த கடனை மஞ்சளுக்கு 365 நாட்களும், இதர விவசாய விளைபொருட்களுக்கு 180 நாட்களும் கிடங்கில் இருப்பு வைத்து பயன்பெறலாம். வியாபாரிகளுக்கும் இந்த பொருளீட்டுக்கடன் பொருளின் மதிப்பில் 75 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை 9 சதவீதம் வட்டியில் பெற்றுக்கொள்ளலாம். அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் 180 நாட்கள் காலக்கெடுவில் இந்த கடன் வழங்கப்படுகிறது.
இதுபோல் விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் ஏராளமான சலுகைகள் மற்றும் வசதிகள் செய்யப்படுகின்றன. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி, தங்கள் பொருட்களை தரமாகவும், விலை அதிகமாகவும் விற்பனை செய்ய இந்த விற்பனைக்கூடங்களை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story