பொதுமக்கள் வருகை குறைந்ததால் பெருந்துறை வாரச்சந்தை வெறிச்சோடியது


பொதுமக்கள் வருகை குறைந்ததால் பெருந்துறை வாரச்சந்தை வெறிச்சோடியது
x
தினத்தந்தி 19 July 2021 3:02 AM IST (Updated: 19 July 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் வருகை குறைந்ததால் பெருந்துறை வாரச்சந்தை வெறிச்சோடியது.

பெருந்துறை
பொதுமக்கள் வருகை குறைந்ததால் பெருந்துறை வாரச்சந்தை வெறிச்சோடியது.
வாரச்சந்தை
பெருந்துறை வாரச்சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடி வருகிறது. அங்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள். பெருந்துறையில் பகுதியில் தங்கியுள்ள வடமாநிலத்தை சேர்ந்தவர்களும் இந்த சந்தைக்கு அதிகமாக வருவார்கள். இதனால் ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெருந்துறை பகுதி பரபரப்பாக காணப்படும்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வாரச்சந்தை கடந்த சில வாரங்களாக செயல்படாமல் இருந்து வந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை கூடியது. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான வியாபாரிகள் மட்டுமே கடைகள் அமைத்து இருந்தார்கள்.
வெறிச்சோடியது
இந்த நிலையில் நேற்று வாரச்சந்தை கூடியது. இந்த சந்தையில் சுமார் 30 வியாபாரிகளே வந்தனர். அவர்கள் புதிதாக கட்டப்பட்டு உள்ள வணிக வளாகத்தில் கடைகளை அமைத்து இருந்தனர். வழக்கமாக காலை 6 மணியில் இருந்தே காய்கறி, மளிகை பொருட்கள், பழங்கள் வாங்க குவியும் மக்கள், நேற்று பொதுமக்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. வட மாநில தொழிலாளர்கள் சிலர் மட்டுமே வந்து தேவையான பொருட்களை வாங்கி சென்றார்கள். 
பொதுமக்களின் வருகைக்காக கடைக்காரர்களும் காத்திருந்தனர். இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், “கொரோனா தொற்று தொடங்கிய காலம் முதல் பெருந்துறை சந்தைக்கு பொதுமக்கள் வருகை குறைந்துவிட்டது. இதனால் வழக்கமாக நடக்கும் வியாபாரம் தற்போது காணப்படுவதில்லை. எனவே இனிவரும் காலங்களில் வாரச்சந்தையில் மக்கள் கூட்டம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது”, என்றனர்.

Next Story