சத்தி, சென்னிமலையில் விபத்து விவசாயி உள்பட 2 பேர் சாவு


சத்தி, சென்னிமலையில் விபத்து விவசாயி உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 19 July 2021 3:15 AM IST (Updated: 19 July 2021 3:15 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம், சென்னிமலையில் நடந்த விபத்துகளில் விவசாயி உள்பட 2 பேர் இறந்தனர்.

ஈரோடு
சத்தியமங்கலம், சென்னிமலையில் நடந்த விபத்துகளில் விவசாயி உள்பட 2 பேர் இறந்தனர்.
விவசாயி
பெருந்துறை சத்திரம்புதூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 37). விவசாயி. இவர் நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் சத்தியமங்கலம் அருகே கோபிரோடு எருமைமடை பள்ளம் பகுதியில் சென்றபோது எதிரில் வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக கார்த்திக் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கார்த்திக் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் மீது மோதிய சரக்கு வேன் சாலையோரமாக கவிழ்ந்தது. இதில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால், அவர் அங்கிருந்து தப்பி சென்றார். மேலும், டிரைவருக்கு அருகில் உட்கார்ந்து இருந்த ஈரோட்டை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் சிவகுமார் (45) படுகாயம் அடைந்தார்.
போலீஸ் விசாரணை
அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் படுகாயம் அடைந்த சிவகுமாரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு விபத்தில் பலியான கார்த்திக்கின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு விபத்து
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (34). இவர் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதனால் அவர் பெருந்துறை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ராஜா தனது மோட்டார் சைக்கிளில் ஈங்கூர் மேம்பாலம் வழியாக பெருந்துறை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது சென்னிமலையை நோக்கி சென்ற காரும், ராஜா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
சாவு
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ராஜாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் அந்த வழியே சென்றவர்கள் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கார் டிரைவரான பவானியை சேர்ந்த சரவணன் மீது சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் இறந்த ராஜாவுக்கு ஸ்ரீவித்யா என்ற மனைவியும், ஒரு வயதில் சித்விக் என்ற மகனும் உள்ளனர்.

Next Story