ஈரோடு மாவட்டத்தில் 100 மையங்களில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஈரோடு மாவட்டத்தில் 100 மையங்களில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 20 July 2021 2:33 AM IST (Updated: 20 July 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 100 மையங்கள் மூலம் நேற்று 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 100 மையங்கள் மூலம் நேற்று 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
ஈரோட்டில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதிப்பு குறைவு என்பதால் பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி சுழற்சி முறையில் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் புறநகர் பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும் முகாம்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசிகள் இல்லாததால் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடப்படவில்லை.
10 ஆயிரம் பேருக்கு...
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான தடுப்பூசிகள் வந்ததையடுத்து அவை மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், சுகாதார மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து மொடக்குறிச்சி, நம்பியூர், சென்னிமலை, திங்களூர், புளியம்பட்டி, குருவரெட்டியூர், அத்தாணி, பவானி, சிவகிரி, தாளவாடி உள்பட புறநகர் பகுதியில் 80 இடங்களிலும், ஈரோடு மாநகர் பகுதியில் 20 இடங்களிலும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் 10 ஆயிரம் பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு போடப்பட்டது.
வழக்கம்போல் தடுப்பூசி போடும் மையங்களில் அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று இடம் பிடித்தனர். ஒவ்வொரு மையங்களிலும் முதலில் வந்த 100 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் ஒவ்வொரு மையங்களிலும் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் டோக்கன் கிடைக்காத பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story