அந்தியூர் சந்தைக்கு விளைபொருட்கள் கொண்டுவந்தபோது கட்டிடம் இடிந்து விழுந்து விவசாயிகள் 3 பேர் பலி
அந்தியூர் சந்தைக்கு விளைபொருட்கள் கொண்டுவந்தபோது, கட்டிடம் இடிந்து விழுந்து விவசாயிகள் 3 பேர் பலியானார்கள்.
அந்தியூர்
அந்தியூர் சந்தைக்கு விளைபொருட்கள் கொண்டுவந்தபோது, கட்டிடம் இடிந்து விழுந்து விவசாயிகள் 3 பேர் பலியானார்கள்.
வாரச்சந்தை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. திங்கட்கிழமை தோறும் நடைபெறும் இந்த சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களுடைய விவசாய விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். அவ்வாறு வரும் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை முந்தைய நாள் இரவான ஞாயிற்றுக்கிழமை அன்றே கொண்டு வந்து விடுவார்கள். இதனால் விவசாயிகளில் ஒரு சிலர் தங்களுடைய விளைபொருட்களை சந்தையில் வைத்துவிட்டு அங்கேயே படுத்து தூங்குவர். ஒரு சிலர் அந்தியூரில் ஆங்காங்கே உள்ள பகுதிகளில் தங்களுடைய விளைபொருட்களை வைத்து உறங்குவதும் உண்டு.
மழை
அதன்படி பர்கூர் மலைப்பகுதி சின்ன செங்குளம் பகுதியை சேர்ந்த விவசாயிகளான சித்தன் (வயது 55), மாதேவன் (55), சின்னப்பையன் என்கிற சின்னத்தம்படி (35), ராஜேஷ் (30), மகேந்திரன் (17), கொங்காடை பகுதியை சேர்ந்த சிவமூர்த்தி (45) ஆகிய 6 பேர் தங்களுடைய விவசாய விளைபொருட்களான தட்டப்பயறு, பச்சைப்பயறு, உளுந்து போன்றவற்றை அந்தியூர் வாரச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மூட்டைகளில் கட்டி அதை லாரியில் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்தியூர் பகுதியில் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் அவர்கள் 6 பேரும் தங்களுடைய விளைபொருட்களை வாரச்சந்தையில் வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இடிந்து விழுந்தது
இதைத்தொடர்ந்து அந்தியூர் தேர் வீதி அருகே உள்ள பழைய கட்டிடத்தில் 6 பேரும் தங்களுடைய விவசாய விளைபொருட்களை இறக்கி வைத்து விட்டு அதன் அருகே படுத்து உறங்கினர். நள்ளிரவு 12.30 மணி அளவில் திடீரென்று அந்த பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் அதன் இடிபாடுகளுக்கு இடையே 6 பேரும் சிக்கி கொண்டதும், தங்களை காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினர். அவர்களுடைய சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இடிபாடுகளை அப்புறப்படுத்தி அவர்கள் 6 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
உடனே இதுகுறித்து அவர்கள் அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் தெரிந்ததும் நிலைய அதிகாரி ஜேசுராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
3 பேர் சாவு
எனினும் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சித்தன், மாதேவன், சின்னதம்படி ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ராஜேஷ், மகேந்திரன், சிவமூர்த்தி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுபற்றி அறிந்ததும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
எம்.எல்.ஏ. ஆறுதல்
மேலும் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை விரைவு படுத்தினார். அதுமட்டுமின்றி அவர் இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினார். அப்போது அந்தியூர் தாசில்தார் விஜயகுமார் உடனிருந்தார்.
இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கட்டிடம் இடிந்து விழுந்த இறந்த சித்தனுக்கு மாணிக்கி என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும், மாதேவனுக்கு தொட்டதாய் என்ற மனைவியும், ஒரு மகனும், சின்னதம்படிக்கு பொம்மி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இறந்தவர்களின் உடல்களை பார்த்து அவருடைய உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
Related Tags :
Next Story