முறையாக குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை; பவானியில் பரபரப்பு


முறையாக குடிநீர் வழங்கக்கோரி  வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை; பவானியில் பரபரப்பு
x
தினத்தந்தி 20 July 2021 2:42 AM IST (Updated: 20 July 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

முறையாக குடிநீர் வழங்கக்கோரி பவானி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பவானி
முறையாக குடிநீர் வழங்கக்கோரி பவானி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
குடிநீர் வினியோகம்
பவானி ஊராட்சி ஒன்றியம் புன்னம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி வண்ணாம்பாறை. இந்த பகுதியில் 125-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக குடிநீர் கிடைக்காமல் இங்குள்ளவர்கள் அவதிப்பட்டு வந்தனர். 
இந்த நிலையில் வண்ணாம்பாறை பகுதியில் கடந்த மார்ச் மாதம் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு ஜம்பை பேரூராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகம் நடந்து வந்தது. 
மற்றொரு இணைப்பு
இதற்கிடையே ஜம்பை பேரூராட்சியின் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றி வரும் ஒருவர் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வண்ணாம்பாறை பகுதியில் உள்ள குடிநீர் இணைப்பில் இருந்து குறிப்பிட்ட சிலருக்காக மற்றொரு இணைப்பு கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. 
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், டேங்க் ஆபரேட்டரிடம் கேட்டு உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் பெண்களின் சாதி பெயரை சொல்லி டேங்க் ஆபரேட்டர் திட்டியதாக தெரிகிறது. இதற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் டேங்க் ஆபரேட்டர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
முற்றுகை 
இந்த நிலையில் வண்ணாம்பாறையை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று பவானி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பின்னர் அவர்கள் ஒன்றிய ஆணையாளர் மாரிமுத்துவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், ‘எங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும். பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை அகற்றக்கூடாது. யாரோ ஒரு சிலருக்காக, அங்கிருந்து தனி குடிநீர் இணைப்பு வழங்கக்கூடாது,’ என குறிப்பிட்டிருந்தனர். 
புகார்
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘அனைத்து ஊராட்சிகளிலும் பாரத பிரதமரின் ஜல் சக்தி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் எங்கள் பகுதியில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். 
மேலும் சாதியை சொல்லி மிரட்டிய டேங்க் ஆபரேட்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story