பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் திருப்தியாக உள்ளது; மாணவிகள் மகிழ்ச்சி


பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் திருப்தியாக உள்ளது; மாணவிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 20 July 2021 3:05 AM IST (Updated: 20 July 2021 3:05 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் திருப்தியாக உள்ளது என்று மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

ஈரோடு
பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் திருப்தியாக உள்ளது என்று மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
வாழ்த்து
தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கொரோனா காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண், பிளஸ்-1 மதிப்பெண், பிளஸ்-2 செய்முறை, உள்மதிப்பீட்டு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பிளஸ்-2 இறுதி மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு இருந்தன.
இந்த மதிப்பெண் பட்டியலை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்தனர். மதிப்பெண்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்த மாணவ-மாணவிகள் தங்கள் ஆசிரிய-ஆசிரியைகளிடம் வாழ்த்து பெற்றனர்.
ஹர்ஷினி
ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூட மாணவி ஜா.ஹர்ஷினி கூறியதாவது:-
பிளஸ்-2 தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெறுவது உறுதியாக தெரிந்தாலும் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று நினைத்தேன். தற்போது சிறந்த மதிப்பெண் பெற்று இருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 10-ம் வகுப்பு மதிப்பெண்ணில் 50 சதவீதம் எடுத்துக்கொண்டதால் அனைத்து மாணவ-மாணவிகளும் நல்ல மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்கள். தற்போது நான் பெற்று உள்ள மதிப்பெண் எனக்கு மகிழ்ச்சியை அளித்து உள்ளது. உயர் படிப்புக்கு எளிதாக செல்ல முடியும். எங்கள் பள்ளிக்கூடத்தில் அனைத்து மாணவிகளும் தேர்ச்சி பெற்று இருப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அக்‌ஷயா
ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் பள்ளிக்கூட மாணவி அக்‌ஷயா கூறியதாவது:-
பள்ளிக்கூடம் நடத்த முடியாத நிலையில் எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு நன்றாக கற்றுக்கொடுத்தனர். வீட்டில் இருந்தே படிக்க பெற்றோரும் மிகவும் உதவியாக இருந்தனர். இந்த தேர்வு முடிவு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் வெளியாகி இருக்கிறது. சிறந்த மதிப்பெண் பெற்று இருக்கிறேன். இந்த நேரத்தில் எங்கள் பள்ளிக்கூட நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மிராக்கிளின் ஜெபஸ்டினா
கொங்கு கல்வி நிலையம் பள்ளிக்கூட மாணவி மிராக்கிளின் ஜெபஸ்டினா கூறியதாவது:-
நான் தேர்வு எழுதி இருந்தால் என்ன மதிப்பெண் கிடைக்கும் என்று யூகித்து இருந்தேனோ, அந்த மதிப்பெண் எனக்கு இப்போது கிடைத்து உள்ளது. எனவே மதிப்பெண் பட்டியலை பார்த்ததும் எனக்கு உற்சாகம் ஏற்பட்டு இருக்கிறது. உயர் கல்வியை உற்சாகமாக தொடங்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. தமிழக அரசுக்கும் எங்கள் ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்வேதா
ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்வேதா கூறியதாவது:-
மதிப்பெண்களை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு வேளை நான் தேர்வு எழுதியிருந்தால் கூட இந்த மதிப்பெண் பெற்று இருப்பேனா என்பது சந்தேகம்தான். ஆனால், எனது 10-ம் வகுப்பு மதிப்பெண் எனக்கு மதிப்பெண் அதிகமாக உதவியது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் மட்டுமின்றி எனது அனைத்து தோழிகளும் தேர்ச்சி பெற்று இருக்கிறோம். இந்த வகையில் நாங்கள் அதிர்ஷ்டமானவர்கள். எங்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தலைமை ஆசிரியை சுகந்தி
தேர்வு முடிவு குறித்து ஈரோடு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுகந்தி கூறியதாவது:-
மதிப்பெண் வெளியான போது எங்கள் பள்ளிக்கூடத்தில் கூடி இருந்த மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். கொரோனா காரணமாக தேர்வு நடத்த முடியவில்லை. மாணவிகளின் பாதுகாப்பை முழுமையாக கருத்தில் கொண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் உயர் கல்விக்கு மாணவிகள் செல்ல மதிப்பெண்கள் வேண்டும் என்ற தேவைக்காக தமிழக அரசு சிறந்த முடிவினை எடுத்து அறிவித்தது. இதனால், அனைத்து மாணவிகளும் நல்ல மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள். 
ஒரு வேளை தேர்வு நடந்திருந்தால், கொரோனாவின் தாக்கத்தால் பல மாணவிகள் தேர்வு எழுத வர முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும். ஆனால் அப்படி ஒரு நிலை ஏற்படாமல் அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி என்பது இந்த அச்சம் மிகுந்த சூழலில் மகிழ்ச்சி அளிக்கும் தேர்வு முடிவாக இது உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story