அறச்சலூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது


அறச்சலூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
x
தினத்தந்தி 20 July 2021 9:20 PM GMT (Updated: 20 July 2021 9:20 PM GMT)

அறச்சலூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

அறச்சலூர்
அறச்சலூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
கிராம நிர்வாக அலுவலர்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 30). இவர் ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள வடுகபட்டி ‘அ’ கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
வடுகபட்டி வடக்கு வீதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (35). இவருடைய கணவர் இறந்துவிட்டார். புவனேஸ்வரி ஈரோடு பகுதியில் தனது மகனுடன் வசித்து வருகிறார். அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
பட்டா மாற்ற...
புவனேஸ்வரிக்கு சொந்தமான வீடு வடுகபட்டி வடக்கு வீதியில் உள்ளது. இந்த வீட்டை அவர் விற்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் தனி பட்டா மாறுதல் செய்ய வடுகபட்டி கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை அணுகியுள்ளார். அதற்கு வெற்றிவேல் அவரிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் புவனேஸ்வரி ரூ.30 ஆயிரம் தருவதாக சம்மதித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் முதலாவதாக ரூ.19 ஆயிரத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்துள்ளார். ஆனால் வெற்றிவேல் மீண்டும் ரூ.10 ஆயிரம் கேட்டு போனில் புவனேஸ்வரியை தொந்தரவு செய்து வந்துள்ளார்.
கைது
இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத புவனேஸ்வரி இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து அவர்கள் புவனேஸ்வரியிடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை வழங்கி அதை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நேற்று மாலை கிராம நிர்வாக அலுவலகம் சென்ற புவனேஸ்வரி, அங்கிருந்த அலுவலர் வெற்றிவேலிடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வெற்றிவேலை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story