ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கும் வரை ஆன்லைன் கல்வி; மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கும் வரை ஆன்லைன் கல்வி எடுக்கப்படுவதை உறுதி செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கும் வரை ஆன்லைன் கல்வி எடுக்கப்படுவதை உறுதி செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.
ஆன்லைன் கல்வி
ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு நேரடி கற்பித்தல் நடைபெறும்வரை 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை ஆன்லைன் மூலம் கற்றல் -கற்பித்தல் (கல்வி) நடைபெறுவதை உறுதிசெய்ய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கல்வி தொலைக்காட்சி
அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவ-மாணவிகள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்களை தினமும் பார்ப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கல்வி தொலைக்காட்சியின் மூலம் கற்பிக்கப்பட்ட பாடங்களின் யூடியூப் இணைப்பு அடுத்தநாள் அனைத்து மாணவ -மாணவிகளுக்கும் அனுப்பி வைத்து தொடர் கற்றலை உறுதி செய்ய வேண்டும்.
மாணவ- மாணவிகள் கல்வி தொலைக்காட்சியை பார்த்து வருவதை ஒரு வகுப்பில் உள்ள அனைத்து பாட ஆசிரியர்களும், சுழற்சி முறையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தொடர்பு கொண்டு கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும்.
செயலிகள்
வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகள் மூலம் உருவாக்கப்பட்டு உள்ள குழுக்களில் ஆசிரிய-ஆசிரியைகள் கல்வி தொலைக்காட்சியின் யூடியூப் இணைப்பு மற்றும் தாங்கள் எடுக்கும் பாடங்களை பதிவு செய்து அதன் வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கூகுள் மீட் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும்.
கற்பிக்கப்பட்ட பாடங்களில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி மதிப்பீடு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கு உரிய விடைத்தாள்களை வாட்ஸ்அப் மூலமாகவோ, நேரடியாக பெற்றோர்கள் மூலமாகவோ ஒப்படைக்கப்பட வேண்டும். அந்த விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்தி மதிப்பெண் பதிவேட்டில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிக்கூடத்துக்கு வரும்போது சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.
பதிவேடு
ஆசிரியர்கள் மேற்கொள்ளும் ஆன்லைன் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் அனைத்தும் உரிய பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். மாணவர்கள் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட ஆசிரியர்கள் உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும். இந்த செயல்பாடுகளை முழுமையாக செய்ய போதுமான ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வந்து செல்ல தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story