ஈரோட்டில் ஜவுளி பல்கலைக்கழகம் அமைக்கப்படும்; அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி


ஈரோட்டில் ஜவுளி பல்கலைக்கழகம் அமைக்கப்படும்; அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
x
தினத்தந்தி 20 July 2021 9:41 PM GMT (Updated: 20 July 2021 9:41 PM GMT)

ஈரோட்டில் ஜவுளி பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு
ஈரோட்டில் ஜவுளி பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
புகார்
ஈரோடு மாநகராட்சியில் பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலமாக புகார் அளிக்கும் வசதியை தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாட்ஸ் அப் செயலி மூலமாக புகார்களை தெரிவிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி 94890 92000 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம். இதில் பெறப்படும் புகார்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும். மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு தார்சாலை அமைக்கப்படும்.
சாயக்கழிவு பிரச்சினை
தமிழகத்தில் ஒரு கட்டிடம் கூட சட்ட விதிக்கு மாறாக இருக்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு கோர்ட்டு உத்தரவின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதிய கட்டிடங்களுக்கான கட்டிட வரைபடம், லேஅவுட் அனுமதியை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும். விதிமீறல் இருக்கக்கூடாது. கட்டிடம் கட்டி முடித்த பிறகு ஆய்வு செய்வதற்கு பதிலாக கட்டிடம் கட்டப்படும் ஒவ்வொரு நிலையிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து தவறு நடந்தால் சரிசெய்து மீண்டும் கட்டுவதற்கு அனுமதிக்கப்படும்.
காவிரி ஆறு, காலிங்கராயன் வாய்க்கால், பிச்சைக்காரன்பள்ளம் ஓடை, பெரும்பள்ளம் ஓடையில் சாயக்கழிவு கலக்கும் பிரச்சினை வரக்கூடாது. நீர்நிலை மாசு அடைந்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இதை தடுக்க வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. இந்த பணிகளை ஓரிரு நாளில் செய்து முடிக்க முடியாது. ஒரு ஆலையை மூடினால் 200 முதல் 300 பேரின் வேலை பறிபோகும். இருந்தாலும் சாயக்கழிவு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
ஜவுளி பல்கலைக்கழகம்
ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சோலார் பகுதியில் கூடுதல் பஸ் நிலையம் அமைக்க ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும், ஈரோட்டில் நவீன காய்கறி மார்க்கெட் அமைக்கப்படும். இது சென்னை கோயம்பேட்டில் இருப்பதைவிட சிறந்ததாக அமையும். இதேபோல் ஈரோட்டில் ஜவுளி பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

Next Story