12 மின் மோட்டார்கள் பறிமுதல்


12 மின் மோட்டார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 July 2021 9:26 PM IST (Updated: 21 July 2021 9:26 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் குடிநீர் இணைப்புகளில் தண்ணீர் உறிஞ்சுவதற்கு பொருத்தப்பட்ட 12 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாநகராட்சியில் 2¼ லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆத்தூர் காமராஜர் அணை, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவை மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு 31 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் குடிநீர் இணைப்புகளில் விதியை மீறி மின்மோட்டாரை பொருத்தி, அதிக அளவில் குடிநீரை உறிஞ்சுவதாக புகார்கள் வந்தன.


இதனால் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் திடீர் சோதனை நடத்துவதற்கு அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் நேற்று பெரியகடைவீதி, ஆண்டாள்நகர் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். 


அப்போது 12 வீடுகளில் குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த 12 மின்மோட்டார்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் 48 வார்டுகளிலும் குடிநீர் வினியோகத்தின் போது சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


Next Story