தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்தது


தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்தது
x
தினத்தந்தி 21 July 2021 7:57 PM GMT (Updated: 21 July 2021 7:57 PM GMT)

மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.

மதுரை, ஜூலை.
மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
கொரோனாவின் 2-வது அலை கடுமையாக இருந்த நிலையில், தற்போது பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, தடுப்பூசி தான். தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு இடங்களிலும் நடைபெற்று வருகிறது.
அதிக கூட்டம்
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தினமும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி முகாம்களில் மக்கள் அதிக ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை தடுப்பூசி தட்டுப்பாடு இருந்தது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். ஆனால் தற்போது தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி சீராக செலுத்தப்பட்டு வருகிறது.
7 லட்சம்
நேற்று மட்டும் 4,476 பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். 
நேற்றைய நிலவரப்படி மதுரையில் இதுவரை 7 லட்சத்து 2 ஆயிரத்து 798 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10, அரசு மருத்துவமனைகளில் 620, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 17 ஆயிரத்து 110 என மொத்தம் 17 ஆயிரத்து 740 தடுப்பூசிகள் கையிருப்பு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story