கொள்ளையடித்த 2 பேர் சிக்கினர்


கொள்ளையடித்த 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 22 July 2021 1:32 AM IST (Updated: 22 July 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் போலீஸ்காரர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் சிக்கினர்

சோழவந்தான்,ஜூலை
சோழவந்தான் அருகே மேட்டுநீரேத்தான் கிராமத்தில் முன்னாள் ெரயில்வே போலீஸ்காரர் பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டில் கடந்த 4-ந் தேதி நகை, பணம் கொள்ளை போனது. இது குறித்து சோழவந்தான் போலீசார் விசாரணை செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். 
இந்த நிலையில் நேற்று சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சோழவந்தான்-வாடிப்பட்டி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறவே அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உரிய முறையில் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் மேட்டுநீரேத்தான் கிராமத்தைச் சேர்ந்த பெரியராமன் என்ற அர்ச்சுணன் (வயது 46), கோவை மாவட்டம், சூலூர் தாலுகா, ஒட்டக்காடுபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (26) என்பதும், அவர்கள்தான் முன்னாள் போலீஸ்காரர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும் சோழவந்தான் பாலமுருகன் நகரில் உள்ள ஒரு வீட்டில் திருட முயற்சி செய்தவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 12 பவுன் நகைகளை மீட்டனர். பின்னர் திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி முதுகுளத்தூர் சிறையில் அடைத்தனர்.

Next Story