கடம்பூர் மலையில் குன்றி கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட நூலகம்; போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் திறந்து வைத்தார்


கடம்பூர் மலையில் குன்றி கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட நூலகம்; போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 21 July 2021 8:59 PM GMT (Updated: 2021-07-22T02:29:31+05:30)

கடம்பூர் மலையில் குன்றி கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் திறந்து வைத்தார்.

ஈரோடு
கடம்பூர் மலையில் குன்றி கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் திறந்து வைத்தார்.
குன்றி மலைக்கிராமம்
சத்தியமங்கலம் அருகே உள்ளது கடம்பூர் மலைப்பகுதி. அடர்ந்த காடுகள் நிறைந்த இந்த மலையில் அமைந்து இருக்கிறது குன்றி என்ற மலைக்கிராமம். இந்த கிராமத்தையொட்டி 18 கிராமங்கள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.
கடம்பூரில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குன்றி கிராமம்தான் இந்த மலைவாழ் மக்களுக்கு நடுநாயகமாக இருக்கிறது. சரியான போக்குவரத்து வசதி இல்லாத இந்த கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஊரக வளர்ச்சித்துறை மூலம் ஒரு நூலகம் கட்டப்பட்டது. ஆனால் போதிய நூலகர், புத்தகங்கள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் வந்து செல்ல தேவையில்லாத இடமாக மாறிப்போனது.
நூலகம்
இந்த நிலையில் கடந்த கொரோனா பாதிப்பு காலத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஈரோடு உணர்வுகள் அமைப்பின் நிறுவனருமான மக்கள் ஜி.ராஜன் தலைமையிலான தன்னார்வலர்கள் மலைவாழ் மக்களுக்கு உதவிகள் செய்யும் நோக்கத்தில் குன்றி மலைக்கிராமத்துக்கு சென்றனர்.
அங்கு உள்ள இளைஞர்கள், பள்ளி-கல்லூரி மாணவிகளின் நிலையை கவனித்த தன்னார்வலர்கள் உடனடியாக ஈரோட்டை சேர்ந்த பொதுமக்கள் மூலம் உடைகள், உணவு வசதி என பல்வேறு உதவிகள் செய்தனர். இதற்காக அங்கு சென்றபோது பயனற்று கிடந்த நூலக கட்டிடத்தை பார்த்து அதுபற்றி விசாரித்தனர். அப்போது நூலகத்தில் புத்தகங்கள் இல்லை. வழிகாட்ட தகுதியான நபர்கள் யாரும் இல்லை என்று மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர்களுக்கு கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உணர்வுகள் அமைப்பின் மூலம் நூலகம் புதுப்பிக்கும் பணிகள் நடந்தது.
போலீஸ் சூப்பிரண்டு
இந்த பணிகள் நிறைவடைந்து கடந்த 19-ந் தேதி திறப்பு விழா நடந்தது. விழாவில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நூலகம் குழந்தைகளை கவரும் வகையில் வண்ணங்கள் தீட்டப்பட்டு, ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. இங்கு புதிதாக சுமார் 5 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை பார்வையிட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், அங்கு திரண்டு இருந்த மாணவ-மாணவிகளை அழைத்து புத்தகங்களை முறையாக படித்து வாழ்க்கையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறி, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.
இந்த விழாவில் ஈரோடு மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் விஜயசங்கர் கலந்து கொண்டார். அவர் நூலகத்தை பார்வையிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேவையான புத்தகங்களை அன்பளிப்பாக நூலகத்துக்கு வழங்கினார்.
2 ஆயிரம் மாணவர்கள்
இதுபற்றி உணர்வுகள் அமைப்பு நிறுவனர் மக்கள் ஜி.ராஜன் கூறியதாவது:-
மலைவாழ் மாணவ-மாணவிகளுக்கு நூலகம் மிகவும் அவசியம் என்று நினைத்தோம். எனவே உணர்வுகள் அமைப்பு சார்பில் அறிவு என்ற திட்டத்தை உருவாக்கி, அதன் மூலம் நூலகம் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டோம். இப்போது அது முழுமை பெற்று இருக்கிறது.
இந்த திட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் மிகப்பெரிய ஆதரவை அளித்தது. மலைக்கிராம மக்களும் நன்றாக படித்து மருத்துவர்களாக, பொறியாளர்களாக, பெரிய அரசு அதிகாரிகளாக வரும் வாய்ப்பினை இந்த நூலகம் அளிக்கும். 
இவ்வாறு அவர் கூறினார்.
பாராட்டு
இந்த நிகழ்ச்சியில் குன்றி ஊராட்சி தலைவர் மாதேஸ்வரன், முன்னாள் தலைவர் ரவி, மலைவாழ் கிராம மக்கள் சங்க தலைவர் ராமசாமி, அறிவு திட்ட இயக்குனர்கள் ஜோதி, ஹக்கீம் பாட்ஷா, அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றி வரும் தன்னார்வலர்களுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story