பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை


பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 22 July 2021 2:53 AM IST (Updated: 22 July 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 
பக்ரீத் பண்டிகை
இஸ்லாமியர்களின் ஈகைத்திருநாளாக பக்ரீத் பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் கொரோனா கட்டுப்பாடுகளை கடை பிடித்து சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. பெரும்பாலும் இந்த ஆண்டு அவரவர் வீடுகளிலேயே தொழுகை நடத்தினார்கள். 
இதேபோல் சில ஊர்களில் ஊர்வலங்கள் நடைபெற்றன. நண்பர்கள், உறவினர்கள் என ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்கள். 
அந்தியூர்
அந்தியூர் பகுதியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். வழக்கமாக ரம்ஜான் பண்டிகை அன்று பெரிய ஏரி பகுதியில் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பை ஒட்டி அவரவர் வீடுகளிலேயே தொழுகை நடத்திக்கொண்டார்கள். 
பின்னர் ஆடுகளை பலியிட்டு, அதில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்கள். சிறுவர்-சிறுமிகள் புத்தாடை அணிந்து மகிழ்ந்தனர். அந்தியூர் கரட்டுப்பாளையம் பீடி தொழிலாளர் காலனி, கெட்டி சமுத்திரம், ஜெ.ஜெ.நகர், குந்துபாயூர், அத்தாணி, ஆப்பக்கூடல், பர்கூர் ஆகிய பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். 
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் பகுதியில் உள்ள மசூதிகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். ஊஞ்சலூர் அருகே உள்ள காசிபாளையம் முத்தவல்லி ஜெய்லாவூதின், வள்ளியம்பாளையம் மசூதியில் முத்தவல்லி சையது, குள்ளக்கவுண்டன்புதூரில் முத்தவல்லி உசைன் ஆகியோர் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 
கொடுமுடி
கொடுமுடி சுல்தான்பேட்டை மற்றும் பைபாஸ் ரோட்டில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை ஜமாத் தலைவர் அபுபக்கர் தலைமையில் நடைபெற்றது. தொழுகையை அஜ்ரத்துகள் யாசின் மற்றும் சாதிக் ஆகியோர் வழி நடத்தினார்கள். 300-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தொழுகையில் கலந்து கொண்டார்கள். முன்னதாக அனைவரும் புத்தாடை உடுத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். கொரோனா பரவல் தடுப்பையொட்டி விதிமுறைகளை பின்பற்றி தொழுகைகள் நடைபெற்றன.
கோபி 
 கோபியில் உள்ள முத்துசா வீதி, ஈரோடு மெயின் ரோடு, கடைவீதி, நல்ல கவுண்டன்பாளையம் உள்ளிட்ட மசூதிகளில் முஸ்லிம்கள் ஏராளமானோர் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story