பெண் தூய்மை பணியாளர்கள் பாலியல் புகார்: மாநகராட்சி கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை


பெண் தூய்மை பணியாளர்கள் பாலியல் புகார்: மாநகராட்சி கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை
x
தினத்தந்தி 21 July 2021 11:22 PM GMT (Updated: 2021-07-22T04:52:11+05:30)

பெண் தூய்மை பணியாளர்கள் அளித்த பாலியல் புகார் குறித்து மாநகராட்சி கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் தெரிவித்தார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் தூய்மை பணியாளர்களுடனான ஆலோசனை கூட்டம், தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநகராட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 12 ஆயிரம் தூய்மை பணியாளர்களும் பங்கேற்றனர்.

அப்போது அவர்கள், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். குறிப்பாக தங்களுக்கு பாலியல் தொந்தரவு வருவதாக பெண் தூய்மை பணியாளர்கள் குற்றம்சாட்டினர்.

ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறியதாவது:-

பாலியல் தொந்தரவு

பணி நீக்கம் செய்யப்பட்ட 12 ஆயிரம் ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அவர்கள் வைத்த அதே கோரிக்கையை எங்கள் ஆணையம் சார்பாக தமிழக அரசுக்கு வைக்கிறோம். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை வாய்ப்புள்ள துறைகளில் மீண்டும் பணியமர்த்த வேண்டும்.

பெண் தூய்மை பணியாளர்கள் 3 பேர் பாலியல் தொந்தரவு உள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த புகார்கள் தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வளவு பணம் கொடுத்தாலும் மனித கழிவுகளை அள்ளும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபடக்கூடாது. அதை செய்யுமாறு யாரேனும் வற்புறுத்தினால் அவர்கள் மீது புகார் அளிக்கலாம். தூய்மை பணியாளர்களையே துடைப்பம் போன்றவை வாங்க சொல்வதாக புகார்கள் வந்தன. அவ்வாறு கூறியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.25 லட்சம் நிவாரணம்

கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ள தூய்மை பணியாளர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, தமிழக முதல்-அமைச்சரிடம் வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் துணை கமிஷனர்கள் டாக்டர் எஸ்.மனிஷ், டி.சினேகா, சிம்ரன்ஜீத் சிங், சரண்யா அரி, உதவி கமிஷனர் பெர்மி வித்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story