மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் சாய்ந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு + "||" + Traffic damage caused by sloping trees on the hillside

மலைப்பாதையில் சாய்ந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு

மலைப்பாதையில் சாய்ந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் மழையுடன் வீசிய பலத்த காற்றில் மலைப்பாதையில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல்: காற்றுடன் மழை
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் தற்போது சாரல் மழையுடன் இதமான சூழல் நிலவி வருகிறது. இதை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். 


இந்தநிலையில் கொடைக்கானலில் நேற்று அதிகாலை முதலே சாரல் மழை பெய்ய தொடங்கியது. அவ்வப்போது மழையுடன் பலத்த காற்றும் வீசியது. இதனால் பழனி மற்றும் வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் மலைப்பாதைகளிலும், நகரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் மலைப்பாதைகளிலும் ஆங்காங்கே சிறிய, பெரிய மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

சில இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து, மின்கம்பிகள் மீது விழுந்தன. இதனால் மின்கம்பிகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல் பெருமாள்மலை கிராமத்தில் மாரியம்மன் கோவில் எதிரே இருந்த மரத்தின் பெரிய கிளை முறிந்து விழுந்ததில் மின்கம்பம் சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். பின்னர் அங்கு மின்வினியோகம் சீரானது. 


கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் மேல்பள்ளம் என்ற இடத்தில் மரம் ஒன்று சாய்ந்து சாலையில் விழுந்தது. அத்துடன் வடகவுஞ்சி கிராமத்திற்கு செல்லும் மலைப்பாதையில் 2 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதேபோல் மேலும் சில இடங்களிலும் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அவதியடைந்தனர். 

கடும் குளிர்
மரங்கள் சாய்ந்தது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மரங்களை வெட்டி அகற்றினர். இதையடுத்து அங்கு போக்குவரத்து சீரானது.


கொடைக்கானலில் நேற்று விட்டுவிட்டு சாரல் மழை பெய்ததுடன், பகல் நேரத்தில் சூரியனே தெரியாதபடி மேக கூட்டங்கள் வானத்தை ஆக்கிரமித்து கொண்டன. இதனால் நகரில் கடும் குளிர் நிலவியது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொடைக்கானலில் தங்கியிருந்த 10 பேர் கைது
கொடைக்கானலில் அனுமதியின்றி தங்கியிருந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. மேலும் 2 இடங்களில் கொரோனா சிகிச்சை மையம்
கொடைக்கானலில் மேலும் 2 இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.