கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டி
கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள வணிகர் சங்க அலுவலகத்தில் வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் சூழலில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முழு முயற்சியாக அனைத்து நடவடிக்கைகளும் முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்திற்கு நேற்று (நேற்றுமுன்தினம்) 16 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன. இன்றைய தினம் (நேற்று) 69 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
வணிகர்கள் பொதுவாக பொதுமக்களை நேரடியாக சந்திக்கக்கூடியவர்கள். இதனால் வணிகர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை 5 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவர்களில் 4 லட்சத்து 35 ஆயிரம் பேர், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள். 85 ஆயிரம் பேர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டவர்கள்.
கொரோனா 3-வது அலை ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. பல முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். படுக்கைகள் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்துள்ளோம். கிட்டத்தட்ட 1,000 படுக்கைகள் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
முதல்அலை, 2-வது அலையின்போது திரவ ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டது. தற்போது தனியார் பங்களிப்புடன் காற்றில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது.கொரோனா தொற்றை பொருத்தவரை பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் குறைத்துவிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மேலவெளி ஊராட்சியில் மேலவெளி தோட்டம் ஜெபமாலைபுரத்தில் ஒரே வீட்டை சேர்ந்த 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு பணிகளை பார்வையிட்ட கலெக்டர், சுகாதாரத்துறை மூலம் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்றதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story