குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் போராட்டம்


குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் போராட்டம்
x
தினத்தந்தி 26 July 2021 12:55 AM IST (Updated: 26 July 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் போராட்டம் நடத்தினர்

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் போராட்டம் நடத்தினர்.
குடிநீர்
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட விளாச்சேரி மொட்டமலை, கலைஞர் நகர் பகுதியில் கடந்த 2 மாதமாக குடிநீர் சப்ளை இல்லை. அதனால் அப்பகுதி மக்கள் வெளியில் லாரிகளில் விற்கப்படும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கிவந்தனர். இந்த நிலையில் திடீரென்று நேற்று காலிகுடங்களுடன் பெண்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் அதே பகுதியில் உள்ள சாலையில் குடிதண்ணீர் கேட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
இந்த நிலையில் அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். 
நடவடிக்கை இல்லை
போராட்டம் குறித்து பெண்கள் கூறும்போது கடந்த 2 மாதத்திற்கு முன்பு மின்மோட்டார் பழுதாகிவிட்டது. அதை சரி செய்து தரப்படும் என்று ஊராட்சி நிர்வாகத் தரப்பில் கூறினர். கடந்த 50 நாட்களாக ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையிலும் பழுதான மின் மோட்டாரை சரி செய்து குடிநீர் சப்ளை செய்தபாடில்லை. 
ஊராட்சி நிர்வாகத்திடம் 2 மாதமாக தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. எங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படாததை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேறு வழி இன்றி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் காலி குடங்களுடன் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.

Next Story