ஆற்றுப்பாசன பகுதியில் கருகும் நெற்பயிர்கள்-நாற்றுக்கள் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
குடமுருட்டி ஆற்றுப்பாசன பகுதியில் நடவு செய்த நெற்பயிர்கள்-நாற்றுக்கள் கருகுவதால் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் சாகுபடி நடைபெறுவது வழக்கம். அதுபோக கோடைநெல் சாகுபடியும் நடைபெறும். குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தவுடன் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
தஞ்சையை அடுத்த கீழத்திருப்பந்துருத்தி பகுதியில் காவிரியில் இருந்து பிரிந்து செல்லக்கூடிய குடமுருட்டி ஆற்றின் திருத்துக்கால் வாய்க்கால் மூலம் 800 ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெறும். இந்த பகுதியானது கல்லணையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் தலைமடை பகுதியாக உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதும் எப்படியும் குடமுருட்டி ஆற்றில் 2,400 கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என்று மேலத்திருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், உமையாள்ஆற்காடு, கீழத்திருப்பூந்துருத்தி, கண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்துளை கிணற்று தண்ணீரை விலைக்கு வாங்கி, நாற்றுகள் தயார் செய்யும் பணியை விவசாயிகள் மேற்கொண்டனர்.
ஆனால் குடமுருட்டி ஆற்றில் 900 கனஅடி தண்ணீருக்கு மேல் திறக்கப்படாததால் வாய்க்காலில் தண்ணீர் ஏறவில்லை. திருப்பூந்துருத்தி வாய்க்கால், திருத்துக்கல் வாய்க்காலில் தண்ணீர் செல்லாததால் இந்த வாய்க்கால் பாசன பகுதியில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. நடவு செய்ய முடியாமல் நாற்றுக்களும் வீணாகுகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
இனிமேல் நடவு செய்த நெற்பயிரையும், நடவு செய்யப்படாமல் உள்ள நாற்றுக்களையும் காக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக திருப்பூந்துருத்தியை சேர்ந்த விவசாயி சுகுமாரன் கூறும்போது, குடமுருட்டி ஆற்றில் 2,400 கனஅடி தண்ணீர் திறந்தால் மட்டுமே வாய்க்கால்களில் தண்ணீர் ஏறும். ஆனால் அந்த அளவுக்கு தண்ணீர் திறக்கப்படாததால் திருத்துக்கால் வாய்க்கால், திருப்பூந்துருத்தி வாய்க்கால், கண்டியூர் வாய்க்காலில் தண்ணீர் செல்லவில்லை. திருத்துக்கால் வாய்க்காலில் கடந்த 11 ஆண்டுகளாக தண்ணீர் செல்லவில்லை. அந்த வாய்க்கால் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. திருப்பூந்துருத்தி வாய்க்கால் 70 சதவீதம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆற்றில் தண்ணீர் வரும் என்று நம்பி நாற்றுக்களை தயார் செய்துள்ளோம். ஆனால் தண்ணீர் வராததால் பலர் நடவு செய்யாமல் விட்டுவிட்டனர். இதனால் நாற்றுக்கள் காய்ந்து வீணாகுகிறது. நடவு செய்த விவசாயிகளும் நெற்பயிரை காப்பாற்ற தண்ணீர் இல்லாததால் கருக தொடங்கிவிட்டது. கண்டியூர் வாய்க்கால் பாசன பகுதியில் நடவு செய்யவில்லை. ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்து நடவு செய்துள்ளனர். நாற்றுக்கள் தயார் செய்ய ரூ.10 ஆயிரம் வரை செலவாகி உள்ளது.
எனவே தமிழகஅரசு இழப்பீடாக நடவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், நாற்றுக்கள் தயார் செய்த விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story