ரெயில் நிலையம் முன்பு தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்


ரெயில் நிலையம் முன்பு தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 July 2021 7:42 PM GMT (Updated: 26 July 2021 7:42 PM GMT)

ரெயில்வே தொழிற்சங்க தலைவரின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக குற்றம் சாட்டி எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் நேற்று மதுரை ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தது.

மதுரை, ஜூலை.
ரெயில்வே தொழிற்சங்க தலைவரின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக குற்றம் சாட்டி எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் நேற்று மதுரை ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தது.
தொலைபேசி ஒட்டு கேட்பு
அகில இந்திய ரெயில்வே கூட்டமைப்பின் பொது செயலாளர் மிஸ்ராவின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதனை தொடர்ந்து, நாடு முழுவதும் ரெயில்வே தொழிற்சங்கங்கள் தரப்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மதுரையிலும், எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் சார்பில் ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழகுராஜா தலைமை தாங்கினார். ரவிசங்கர் முன்னிலை வகித்தார்.
ஜனநாயகத்துக்கு எதிரானது
சங்கத்தின் மதுரை கோட்ட செயலாளர் ரபீக், உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பேசினர். அப்போது, அகில இந்திய ரெயில்வே கூட்டமைப்பின் பொது செயலாளர் மிஸ்ராவின் தொலைபேசி இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்கப்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் தொழிற்சங்கத்தலைவர்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் தொழிலாளர் அமைப்பு மற்றும் சர்வதேச நாடுகள் அங்கீகரித்துள்ள தொழிற்சங்கங்களை முடக்கும் வகையிலான விதிமீறலாகும். இந்த செயலுக்காக மத்திய அரசு தனி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.” என்றார். 
வேலை பறிப்பு
தொழிற்சங்கங்களின் உரிமையை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பாதுகாப்பு தளவாட உற்பத்தி பணிமனைகளை தனியாருக்கு கொடுப்பதன் மூலம் 76 ஆயிரம் பாதுகாப்புத்துறை ஊழியர்களின் வேலை பறிக்கப்படுவதை நிறுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 50 சதவீத காலிப்பணியிடங்களை சரண்டர் செய்வதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை கோட்டத்தை சேர்ந்த ரெயில்வே பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story