நில ஆக்கிரமிப்பை 12 வாரங்களில் அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு
திருமங்கலம் அருகே நில ஆக்கிரமிப்பை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை, ஜூலை
திருமங்கலம் அருகே நில ஆக்கிரமிப்பை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆதிதிராவிடர்கள் நிலம்
மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டையில் ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான 2.17 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் வழியாக அங்குள்ள ஆதிதிராவிடர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். அந்த இடத்தை அவர்கள் பாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலத்தை அங்குள்ள சிலர் ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளனர்.
இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர்கள் அந்த பாதையை பயன்படுத்த முடியவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் அரை கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக மதுரை மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டது.
கலெக்டர் உத்தரவு
அதன்பேரில் உசிலம்பட்டி ஆதிதிராவிட தனி தாசில்தார் உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மேலக்கோட்டை ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், ஆக்கிரமிப்பு குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி 12 வாரங்களில் அதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story