ஈரோட்டில் ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து


ஈரோட்டில் ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 5 Aug 2021 2:23 AM IST (Updated: 5 Aug 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் தப்பியது.

ஈரோடு திருநகர் காலனி மீனாட்சி சுந்தரம் வீதியில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்திற்குள் பணம் எடுக்கும் 2 எந்திரங்கள், காசோலை போட ஒரு எந்திரம், வங்கி கணக்கு புத்தகம் பதிவு செய்ய ஒரு எந்திரம் உட்பட 5 எந்திரங்கள் உள்ளன. இந்த மையத்தில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் திடீரென கரும்புகை வந்தது. இதைப்பார்த்த ஏ.டி.எம். மையத்தின் காவலாளி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கும், கருங்கல்பாளையம் போலீசுக்கும் தகவல் கொடுத்தார். இதற்கிடையில் இதுபற்றி தகவல் அறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதியில் மின் இணைப்பினை துண்டித்தனர்.
தீயணைப்பு படைவீரர்கள் வருவதற்குள் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏ.டி.எம். மையத்திற்குள் இருந்த தீயணைப்பான் கருவியை பயன்படுத்தி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கு ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவே காரணம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஏ.டி.எம். எந்திரத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பேப்பர் பண்டல்கள் எரிந்து சாம்பலானது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் ஏ.டி.எம். எந்திரம் மற்றும் எந்திரங்களில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

Next Story