20 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: தமிழகத்தில் 1,997 பேருக்கு கொரோனா


20 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: தமிழகத்தில் 1,997 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 Aug 2021 1:49 PM GMT (Updated: 2021-08-06T19:19:04+05:30)

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,997 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 58 ஆயிரத்து 149 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,164 ஆண்கள், 833 பெண்கள் என மொத்தம் 1,997 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 220 பேரும், ஈரோட்டில் 161 பேரும், சென்னையில் 196 பேரும், செங்கல்பட்டில் 130 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குறைந்தபட்சமாக தென்காசியில் 8 பேரும், ராமநாதபுரம், பெரம்பலூரில் தலா 9 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்குட்பட்ட 111 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 290 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

33 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 73 லட்சத்து 34 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 15 லட்சத்து 941 ஆண்களும், 10 லட்சத்து 68 ஆயிரத்து 419 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேர் உள்பட 25 லட்சத்து 69 ஆயிரத்து 398 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 94 ஆயிரத்து 259 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 70 ஆயிரத்து 219 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 28 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 5 பேரும் என 33 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக திருப்பூரில் 5 பேரும், சேலம், சென்னையில் தலா 4 பேரும், தஞ்சாவூர், கோவையில் தலா 3 பேரும் உள்பட என 16 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 34 ஆயிரத்து 230 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

1,943 பேர் ‘டிஸ்சார்ஜ்’

தமிழகத்தில் நேற்று 39 ஆயிரத்து 240 ஆக்சிஜன் படுக்கைகள், 24 ஆயிரத்து 258 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 7 ஆயிரத்து 470 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 70 ஆயிரத்து 968 படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 1,943 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 187 பேரும், தஞ்சாவூரில் 104 பேரும், சென்னையில் 146 பேரும், ஈரோட்டில் 138 பேரும் அடங்குவர். இதுவரையில் 25 லட்சத்து 15 ஆயிரத்து 30 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 20 ஆயிரத்து 138 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story