ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்; 3 பேர் கைது


ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2021 5:47 AM GMT (Updated: 7 Aug 2021 5:47 AM GMT)

திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையம் பின்புறம் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு தலைமையில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தமிழக பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று ஆந்திராவில் இருந்து வந்தது. அந்தக் காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த காரை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த மற்றொரு கார் போலீசாரை கண்டவுடன் வந்த வழியே மிக வேகமாக திரும்பி சென்றது.

இதைக்கண்ட போலீசார் ஆய்வு செய்து கொண்டிருந்த காரில் ஏறி வேகமாக சென்ற காரை பின் தொடர்ந்தனர். சினிமா பாணியில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் அந்த காரை போலீசார் துரத்திச் சென்றனர்.

அப்போது முன்னால் சென்ற காரில் இருந்த டிரைவர் காரை கோடுவள்ளி சவுக்குத் தோப்பு என்ற இடத்தில் நிறுத்திவிட்டு தலைமறைவானார். அந்த காரில் இருந்த மற்றொரு நபரை போலீசார் லாவகமாக பிடித்து கொண்டனர்.

அதன் பிறகு அந்த காரை சோதனை செய்ததில், அதில் ரூ.1 கோடி மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகள் இருந்தன. போலீஸ் விசாரணையில் செம்மரக்கட்டைகள் இருந்த காரில் பிடிபட்ட நபர் ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியை சேர்ந்த ரத்தினம் (வயது 45). என்பதும், பிடிபட்ட காருக்கு முன்னால் பாதுகாப்பாக வந்த சொகுசு காரை ஓட்டி வந்தவர்கள் திருத்தணி அருகே அலமேலுமங்காபுரம் காலனியை சேர்ந்த உமாபதி (47) அவினாஷ் (39) என்பதும் தெரியவந்தது.

இந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து 2 சொகுசு காரையும் பறிமுதல் செய்து பிடிபட்ட செம்மரக்கட்டைகளை திருத்தணி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story