வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவர், மாமனார் கைது
சென்னையை அடுத்த பனையூரைச் சேர்ந்தவர் பிரமோத் (வயது 25). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சினேகா (19). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில் பிரமோத், தனது மனைவி சினேகாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் சினேகா, கணவருடன் கோபித்துக்கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தாம்பரம் அடுத்த சேலையூர், ரங்கநாதன் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார். கடந்த 1-ந் தேதி இரவு பிரமோத், செல்போனில் சினேகாவை தொடர்பு கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் விரக்தி அடைந்த சினேகா, தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வரதட்சணை கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக சேலையூர் போலீஸ் நிலையத்தில் சினேகாவின் தந்தை புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சினேகாவின் கணவர் பிரமோத் மற்றும் மாமனார் சண்முகம் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story